ஈளாடா தடுப்பணை நிரம்பியது
கோத்தகிரி நகருக்கு குடிநீர் வழங்கும் ஈளாடா தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது.
கோத்தகிரி,
கோத்தகிரி நகருக்கு குடிநீர் வழங்கும் ஈளாடா தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
கோத்தகிரி அருகே கோடநாடு ஈளாடா கிராம பகுதியில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், அங்கிருந்து குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு நேரு பூங்கா அருகே உள்ள நீர் உந்து நிலையத்திலுள்ள தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது.
தொடர்ந்து நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் வினியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில் கோடநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஈளாடா தடுப்பணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது.
தட்டுப்பாடு ஏற்படாது
கடந்த 2 நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக, கோத்தகிரி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஈளாடா தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தற்போது தடுப்பணை நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. கோத்தகிரி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மாற்று திட்டமாக கொண்டு வரப்பட்ட அளக்கரை குடிநீர் திட்டத்தில் நீர் உந்து அறைகளில் ஏற்பட்டு வரும் மின்னழுத்த குறைபாடு காரணமாக மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகின்றன. இதனால் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கோத்தகிரி நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வரும் ஈளாடா தடுப்பணை நிரம்பி உள்ளதால், வருகிற கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.