கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தர்ணா


கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தர்ணா
x
தினத்தந்தி 14 Nov 2022 6:45 PM GMT (Updated: 14 Nov 2022 6:46 PM GMT)

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் தாலுகா சத்தியகண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 60). இவர் நேற்று காலை முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், கனமழையினால் என்னுடைய கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 ஆடுகள் செத்தன. நான் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வசித்து வருகிறேன். நானும், எனது மகன் தினேஷ்குமாரும் மாற்றுத்திறனாளிகள். எனவே மாவட்ட கலெக்டர், நேரில் வந்து எனது வீட்டை பார்வையிட்டு வெள்ள நிவாரணம் வழங்குவதோடு உடனடியாக அரசு தொகுப்பு வீடு கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் தனது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு அவர் அங்குள்ள தரையில் படுத்து உருண்டு புரண்டார். பின்னர் அரசு அதிகாரிகள் விரைந்து வந்து அவரை சமாதானப்படுத்தி கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பிறகு அவர் தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story