பிள்ளைகள் கவனிக்காததால் முதியவர் தற்கொலை: விஷம் குடித்த மனைவியும் சாவு திருவெண்ணெய்நல்லூர் அருகே பரிதாபம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே பிள்ளைகள் கவனிக்காததால் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் விஷம் குடித்த மனைவியும் உயிாிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சாரங்கபாணி (வயது 70). இவரது மனைவி கமலா (60). இவர்கள் தள்ளுவண்டி மூலம் வளையல் வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சாரங்கபாணியையும், கமலாவையும் அவர்களது பிள்ளைகள் சரிவர கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர்கள் இருவரும், கடந்த 19-ந்தேதி வீட்டில் வைத்து விஷத்தை குடித்து விட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாரங்கபாணி பரிதாபமாக உயிரிழந்தார். தீவிர சிகிச்சை பெற்று வந்த கமலா நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.