தங்கும் விடுதியில் முதியவர் தற்கொலை
பழனி தங்கும் விடுதியில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
பழனி அடிவாரத்தில் தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 60 வயது உடைய முதியவர் ஒருவர் அறை எடுத்து தங்கினார். இந்நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த அறை வெகுநேரம் பூட்டியே இருந்தது. இதனால்சந்தேகம் அடைந்த ஊழியர்கள், அடிவாரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அந்த முதியவர் விஷம் குடித்து இறந்து கிடந்தார்.
உடனே போலீசார் அந்த அறையில் சோதனை செய்தனர். அங்கு சிம்கார்டு இல்லாத செல்போன் மற்றும் மலையாளத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருந்தது. அந்த கடிதத்தில், எனக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளதால், நான் தற்கொலை செய்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. மேலும் ஈமகிரியை காரியத்துக்கு பணம் வைத்துள்ளேன் என்று எழுதி இருந்தார். ஆனால் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று அதில் குறிப்பிடவில்லை.
பின்னர் அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.