வடமதுரை அருகே ஆம்புலன்ஸ் வாகனம் மோதி முதியவர் பலி


வடமதுரை அருகே ஆம்புலன்ஸ் வாகனம் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 20 Sept 2023 2:30 AM IST (Updated: 20 Sept 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே ஆம்புலன்ஸ் வாகனம் மோதி முதியவர் பலியானார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே ஆம்புலன்ஸ் வாகனம் மோதி முதியவர் பலியானார்.

மோட்டார் சைக்கிள் விபத்து

திண்டுக்கல் அருகே நீலமலைக்கோட்டை, குமாரபாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 42). இவரும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (42) என்பவரும் நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில், வடமதுரை அருகே தாமரைப்பாடியில் திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை லோகநாதன் ஓட்டினார். தாமரைப்பாடி பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது, திடீரென்று நிலைதடுமாறி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில், அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. அப்போது ஆம்புலன்ஸ் ஊழியர்கள், விபத்தில் காயமடைந்த லோகநாதன், கிருஷ்ணனை வாகனத்தில் ஏற்றினர்.

முதியவர் பலி

அதன்பிறகு ஆம்புலன்ஸ் வாகனத்தை திருப்புவதற்காக அதன் டிரைவர் பின்னோக்கி ஓட்டினார். அப்போது அங்கு நின்றிருந்த கல்லாத்துப்பட்டியை சேர்ந்த கண்ணன் (80) என்பவர் மீது ஆம்புலன்ஸ் வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரையும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்றனர்.

அதன்பிறகு மருத்துவமனையில் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் கண்ணன் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் நேற்று இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆம்புலன்ஸ் வாகன டிரைவரான நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த அண்ணாதுரை (48) மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story