மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி முதியவர் பலியானார்.
நடையனூர் அருகே உள்ள பூலான்காலனி பகுதியை சேர்ந்தவர் ராமநாயக்கர் (வயது 84). இவர் தனது வீட்டில் இருந்து நொய்யல் செல்வதற்காக வேலாயுதம்பாளையம் -நொய்யல் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முனிநாதபுரம் வெள்ளக்கல் மேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு கரூர் குப்பிச்சிபாளையம் எல்லமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலை பள்ளியின் பஸ்சை அதன் டிரைவர் நல்லசாமி (63) இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ், ராமநாயக்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராமநாயக்கரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து ராமநாயக்கர் மகன் ரவி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார், டிரைவர் நல்லசாமி மீது வழக்குப்பதிந்து, அந்த பஸ்சையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.