கடலூர் காப்பகத்தில் இருந்து அன்புஜோதி ஆசிரமத்திற்கு மாற்றப்பட்ட முதியவர் மாயம் போலீசார் விசாரணை
கடலூர் காப்பகத்தில் இருந்து அன்புஜோதி ஆசிரமத்திற்கு மாற்றப்பட்ட முதியவர் மாயமானாா். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூர் அருகே உள்ள சங்கொலிக்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 60). திருமணமாகாமல் தனிமையில் வசித்து வந்த இவரை, குடும்பத்தினர் கவனிக்க முடியாததால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடலூர் முதுநகர் அருகே ஏணிக்காரன்தோட்டத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். பின்னர் சில மாதங்களிலேயே அவரை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்திற்கு மாற்றியுள்ளனர்.
இதற்கிடையே குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரால், அங்கு தங்கியிருந்தவர்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இதுபற்றி அறிந்த ஜெயக்குமாரின் குடும்பத்தினர், குண்டலப்புலியூர் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரித்த போது, ஜெயக்குமார் கடந்த ஆண்டே வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் வாணியம்பாடி காப்பகத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது, அங்கு ஜெயக்குமார் இல்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில் ஜெயக்குமாரின் தம்பியான காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, கடலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட எனது அண்ணன் ஜெயக்குமார் எங்கு இருக்கிறார், அவர் உயிருடன் இருக்கிறாரா? என்ற எந்தவொரு தகவலும் இல்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி ஜெயக்குமாரின் நிலை குறித்து தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரிக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கடலூர் முதுநகர் போலீசார், ஏணிக்காரன்தோட்டத்தில் உள்ள காப்பகத்திற்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வாணியம்பாடி போலீசாரை தொடர்பு கொண்டு, அவர்கள் மூலம் ஜெயக்குமார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.