முதியவர், வடமாநில வாலிபரை தாக்கிய 4 திருநங்கைகள் சிக்கினர்
தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் பகுதியில் பணம் தர மறுத்ததால் முதியவரையம், வடமாநில வாலிபரையும் தாக்கிய 4 திருநங்கைகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் பகுதியில் பணம் தர மறுத்ததால் முதியவரையம், வடமாநில வாலிபரையும் தாக்கிய 4 திருநங்கைகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் மீட்கப்பட்டது.
முதியவர் மீது தாக்குதல்
தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர்நகரைச் சேர்ந்த ரத்தினம் மகன் ஜெகதீசன் (வயது 65). சம்பவத்தன்று இவர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த சில திருநங்கைகள் ஜெகதீசனிடம் பணம் கேட்டு உள்ளனர். இதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த திருநங்கைகள் ஜெகதீசனை தாக்கி, அவரது மோட்டார் சைக்கிள் சாவியை பறித்துக் கொண்டார்களாம். அதே போன்று அங்கு இருந்த மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த ஷரிப்புதின் மகன் சசீருதின் (33) என்பவரையும் பணம் தர மறுத்ததால், அவரையும் தாக்கி செல்போனை பறித்துச் சென்றனர்.
4 திருநங்கைகள் சிக்கினர்
இதுகுறித்து ஜெகதீசன் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் முதியவரை தாக்கியும், வடமாநில வாலிபரிடம் செல்போனை பறித்து சென்றதாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த செல்வம் மகள் யாசினி என்ற அபினேஷ், காயல்பட்டிணத்தைச் சேர்ந்த பென்னிலா என்ற செல்வகணபதி, தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த ஷில்பா என்ற முத்துராஜ், பாளையங்கோட்டை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பாவனா என்றசரவணகுமார் (21) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
மேலும் இதுபோன்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் திருநங்கைகள் குறித்து பொதுமக்கள் அவசர போலீஸ் தொலைபேசி எண். 100 மற்றும் 95141 44100 என்ற எண்ணுக்கு தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.