ரூ.10 ஆயிரம் வரை கொடுத்தால் மட்டுமே முதியோர் உதவித்தொகை கிடைக்கிறது


ரூ.10 ஆயிரம் வரை கொடுத்தால் மட்டுமே முதியோர் உதவித்தொகை கிடைக்கிறது என்று குடியாத்தம் நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

வேலூர்

நகரமன்ற கூட்டம்

குடியாத்தம் நகரமன்ற கூட்டம் தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ், மேலாளர் சுகந்தி, சுகாதார அலுவலர் மொய்தீன், நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் நகரமன்ற தலைவர் சவுந்தர்ராஜன் பேசினார். அப்போது கையில் நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி தனது வார்டில் உள்ள சித்திவிநாயகர் கோவில் தெருவில் சாலை மற்றும் வடிகால் வசதிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செய்ய பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை தனது சொந்த பணத்திலிருந்து தந்துள்ளார். அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் நகரமன்ற உறுப்பினர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்த நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பங்களிப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் பேசினர்.

டாஸ்மாக் கடை

உறுப்பினர் ராணி: காமராஜர் பாலம் அருகே 2 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல், பெண்கள் செல்வதற்கு மிகவும் அச்சமாக உள்ளது. இந்த கடையை மாற்றவேண்டும்.

ஆட்டோ மோகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேதாஜி சவுக் அருகே உள்ள டாஸ்மாக் கடையும் அகற்ற வேண்டும், ஒரு வழி பாதையாக உள்ள அங்கு டாஸ்மாக்கடை இருப்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என கூறினர். அப்போது உறுப்பினர்கள் பலர் எழுந்து அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கடை அருகே காலை முதலே மது விற்பனை நடக்கிறது. குடியாத்தம் நகரில் அதிகளவு கஞ்சா விற்பனை உள்ளது. இதனையும் போலீசார் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டினர்.

தண்டபாணி: நேதாஜி சவூக் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலின் ஒரு பகுதி நகராட்சி இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதனை ஆய்வு செது, அந்த இடத்தில் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பிடம் கட்டித் தர வேண்டும்.

முதியோர் உதவித்தொகை

நவீன்சங்கர்: கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை மீண்டும் கொட்டுகிறார்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 3-வது வார்டு பகுதிகளில் கால்வாய்கள் சீர் அமைக்க வேண்டும். லைசென்ஸ்கள் இல்லாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .நாய்கள் மற்றும் குரங்குகளை பிடிக்கவேண்டும்.

மனோஜ்: தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பான ஆட்சிக்கு அதிகாரிகள் சிலர் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள். குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை பெற ரூ.8,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை கொடுத்தால் மட்டுமே கிடைக்கிறது. தகுதி இருந்தும் பணம் கொடுக்காததால் பலருக்கு முதியோர் உதவித் தொகை வரவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுமதி: திலகர்தெரு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரேணுகாபாபு: ாஜேந்தர்சிங் தெரு, ராசிஅருணாசல தெரு ஆகிய பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் சாலைகளையும் சீர் செய்ய வேண்டும்.

இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

கடைகளுக்கு சீல்

உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இறைச்சி கடைக்காரர்கள் கூட்டம் நடத்த வேண்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களின் கடைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து சீல் வைக்க வேண்டும். இறைச்சி கழிவுகளை எக்காரணம் கொண்டும் பொதுவெளியிலோ, கால்வாயிலோ கொட்ட அனுமதிக்க கூடாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story