வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது குறித்து தேர்தல் ஆணையம் கருத்து கேட்பு: அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. ஆதரவு


வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது குறித்து தேர்தல் ஆணையம் கருத்து கேட்பு: அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. ஆதரவு
x

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆதரவு தெரிவித்துள்ளது. கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சென்னை,

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது குறித்தும், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணி குறித்தும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் (எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்), கோவை செல்வராஜ் (ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்), காங்கிரஸ் சார்பில் தாமோதரன், நவாஸ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏழுமலை, பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராஜசேகர், ஆறுமுகநயினார், தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி, ஜனார்த்தனன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி

கூட்டத்தில் தெரிவித்த கருத்துகள் குறித்து கட்சி நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க.):- வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளன. வாக்காளர் பட்டியலை சீர் செய்ய வேண்டும். ஆதார் அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள இதர ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்கலாம் என அறிவிக்க வலியுறுத்தினோம். வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைப்பதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லை என்ற எங்களது நிலைப்பாட்டை ஏற்கனவே கூறியிருக்கிறோம்.

அதேவேளையில் ஆதாரை இணைப்பது தொடர்பாக சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும்போது அனைவரும் அதை பின்பற்றுவதுதான் சரியாக இருக்கும்.

முற்றுப்புள்ளி வைக்க முடியும்

ஜெயக்குமார் (அ.தி.மு.க- எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்):- ஆதாரை இணைப்பதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். போலி வாக்காளர்கள் இல்லாத வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 100 சதவீதம் சரியான வாக்காளர் பட்டியலை தயாரிக்க வலியுறுத்தினோம்.

தாமோதரன் (காங்கிரஸ்):- வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பது நல்ல முயற்சி. இதற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

கரு.நாகராஜன் (பா.ஜ.க.):- ஆதாரை வாக்காளர் பட்டியலோடு இணைப்பதை வரவேற்கிறோம். அதேவேளையில் ஆதாரை இணைக்காதவர்களுக்கு விதிவிலக்கு வழங்கியிருப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தோம்.

கட்டாயப்படுத்த வேண்டும்

கோவை செல்வராஜ் (அ.தி.மு.க-ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்):- 17 வயது பூர்த்தி ஆனவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் ஓரிரு மாதங்களில் தேர்தல் வந்தால் அவர்கள் எப்படி வாக்களிக்க முடியும் என கேள்வி எழுப்பிய போது 18 வயது நிரம்பிய பின்புதான் வாக்களிக்க முடியும் என்றும், அதுவரை பெயர்களை சேர்க்க பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியது.

பார்த்தசாரதி (தே.மு.தி.க.):- ஆதாரை இணைத்த பிறகு ஏன் இதர ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்ற திட்டத்தை தொடர வேண்டும். ஆதார் அட்டையை இணைத்தால்தான் வாக்களிக்க முடியும் என்பதை கட்டாயப்படுத்த வேண்டும்.

கம்யூனிஸ்டு எதிர்ப்பு

இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதிநிதிகள்:- வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பதை நாங்கள் கடுமையாக ஆட்சேபித்துள்ளோம். பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தியதன் மூலம் சாதாரண மக்களுக்கான சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லையென்றால் அவர்களது வாக்குரிமை பறிக்கப்படுகிற ஆபத்து தற்போது ஏற்பட்டுள்ளது.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் இதர ஆவணங்கள் மூலம் வாக்களிக்க அனுமதிக்க வலியுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story