தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற ஜூலை 9-ந் தேதி நடக்கிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந் தேதி நடக்கிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது-
தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 30.4.2022 வரை ஏற்பட்ட காலியிடங்களான ஒரு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 3 கிராம ஊராட்சி தலைவர் பதவி மற்றும் 23 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி ஆகியவற்றுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 27-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம்.
பரிசீலனை
வருகிற 28-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. தொடர்ந்து 30-ந் தேதி மதியம் 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் அளிக்கப்படுகிறது. அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். போட்டி இருந்தால், அடுத்த மாதம் 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடத்தப்படும். இதில் பதிவான வாக்குகள் 12.7.2022 அன்று காலை 8 மணிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைத்து எண்ணப்படுகின்றன.
இதற்காக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக, வளர்ச்சி பிரிவு அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் 0461-2340598 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, பொது மக்கள் தேர்தல் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தாலும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.