மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல்
தேனி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் இன்று நடக்கிறது
மாவட்ட திட்டமிடும் குழு
தேனி மாவட்ட திட்டமிடும் குழுவுக்கு மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் தான் வாக்காளர்கள் ஆவார்கள். அதன்படி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் 10 பேர், நகராட்சி கவுன்சிலர்கள் 176 பேர், பேரூராட்சி கவுன்சிலர்கள் 335 பேர் என மொத்தம் 521 வாக்காளர்கள் உள்ளனர்.
மொத்தமுள்ள 12 உறுப்பினர்களில் ஊரக பகுதியில் இருந்து 5 பேரும், நகர பகுதியில் இருந்து 7 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள். ஊரக பகுதிக்கு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களும், நகர பகுதிக்கு நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களும் போட்டியிடலாம். இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடந்தது.
இன்று வாக்குப்பதிவு
ஊரக பகுதிக்கு 5 பேரும், நகர பகுதிக்கு 57 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் நகர பகுதிக்கு மனு தாக்கல் செய்தவர்களில் 21 பேர் வேட்பு மனுவை திரும்பப் பெற்றனர். இதையடுத்து ஊரக பகுதிக்கு 5 பதவிகளுக்கு 5 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்ததால் அவர்கள் 5 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
நகர பகுதிக்கான 7 உறுப்பினர்கள் பதவிக்கு 36 பேர் போட்டிடுகின்றனர். இந்த தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதற்காக கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு மையம், வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையத்துக்கு செல்லும் பாதையில் கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி கவுன்சிலர்கள் 176 பேர், பேரூராட்சி கவுன்சிலர்கள் 335 பேர் என மொத்தம் 511 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலை அமைதியாக நடத்த கலெக்டர் அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.