பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு: கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார்
பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
சென்னை,
ஒற்றை தலைமை கோஷத்துடன் கடந்த மாதம் 23-ந் தேதி கூடிய அ.தி. மு.க. பொதுக்குழுவில், அது நிறைவேற்ற முடியாமல் போனது.
இதனால், எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்தனர்.
மீண்டும் பொதுக்குழு
இந்த நிலையில் மீண்டும் ஜூலை 11-ந் தேதி (அதாவது நேற்று) அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு தடை கேட்டு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கோர்ட்டுக்கு சென்றனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று காலை 9 மணிக்கு அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதேபோல், பொதுக்குழு கூட்டமும் 9.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், அ.தி. மு.க. பொதுக்குழு நடக்குமா?, நடக்காதா? என்ற பரபரப்பான நிலை இருந்தது.
ஆனால், கோர்ட்டு தீர்ப்பு வருவதற்கு முன்னால், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்துக்கு காலை 8.45 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பிரசார வேனில் வந்தார். அவருக்கு வழிநெடுக கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோர்ட்டு தீர்ப்புக்கு காத்திருப்பு
முதலில், செயற்குழு கூட்டம் நடைபெற்ற அரங்கத்துக்கு காலை 8.55 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். ஆனால், மேடைக்கு செல்லவில்லை. கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருந்தார். பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை கேள்விப்பட்டவுடன், உற்சாகமாக எடப்பாடி பழனி சாமி மேடை ஏறினார்.
அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுமார் 300 உறுப்பினர்கள், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்தனர்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை
அதன் பின்னர், அனைவரும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பிரமாண்ட அரங்கத்துக்கு வந்தனர். சுமார் 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்துக்கு கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார்.
கூட்டம் தொடங்கியதும், முதலில் மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படத்துக்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். மேடையில் முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகளுக்கு இருக்கை போடப்பட்டிருந்தது.
ஓ.பன்னீர்செல்வம் இருக்கை காலி
பொருளாளர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தமிழ்மகன் உசேன், கே.ஏ.செங்கோட்டையன் இருக்கைக்கு இடையே தனியாக இருக்கை போடப்பட்டிருந்தது. ஏற்கனவே, வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்ய வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் வராததால், கடைசி வரை அவரது இருக்கை காலியாகவே இருந்தது.
இதேபோல், அவரது ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கும் மேடையில் இருக்கை போடப்பட்டிருந்தது. அவரும் வரவில்லை. கூட்டம் தொடங்கியதும், அதை தலைமை ஏற்று நடத்தித்தருமாறு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனை முன்மொழிந்து எடப்பாடி பழனிசாமி பேசினார். அதை கே.பி.முனுசாமி வழிமொழிந்தார்.
16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தொடர்ந்து, கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பான தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்மொழிய, அதை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வழிமொழிந்தார். அதன்பின்னர், 16 தீர்மானங்களையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாசித்தார்.
அதில், 4-வது தீர்மானமாக, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பு உருவாக்குவது குறித்து நிறைவேற்றப்பட்டது. அதற்காக, கட்சி சட்ட திட்ட விதி எண் 20 அ பிரிவு 7 மாற்றியமைக்கப்பட்டது. அதன்பிறகு நிறைவேற்றப்பட்ட 5-வது தீர்மானத்தின்படி, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ஜெயலலிதா பதவி ரத்து
மேலும், தேர்தல் மூலம் பொதுச்செயலாளரை 4 மாத காலத்துக்குள் தேர்வு செய்வது என்றும், அதற்கான தேர்தலை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை அதிகாரியாக நியமிப்பது குறித்தும் ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று ஏற்கனவே இருந்த சட்ட திட்ட விதிமுறையை ரத்து செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளராக விரைவில் எடப்பாடி பழனிசாமியை கொண்டுவருவதற்கு இது வாய்ப்பாக அமைந்தது.
சிறப்பு தீர்மானம்
அதேபோல், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளும் நீக்கப்பட்டன. மேலும், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி துணை பொதுச்செயலாளர் என்று மாற்றி அமைக்கப்பட்டது.
அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பான சிறப்பு தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் விவரம் வருமாறு:-
தி.மு.க.வோடு நட்பு பாராட்டினார்
அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் விரோதமாக தன் செயல்களாலும், நடவடிக்கைகளாலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அ.தி.மு.க.வை வழிநடத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அவர், அதற்கு நேர்மாறாக, கட்சியை பலவீனப்படுத்தும் விதமாக, தி.மு.க. அரசுடன் நட்பு பாராட்டுவதும், தி.மு.க. அரசின் செயல்பாட்டை பாராட்டி பேசுவதும், தி.மு.க. மற்றும் அதன் தலைவர்களிடம் உறவு வைத்துக்கொண்டு, கட்சியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் செயல்பட்டு வருகிறார்.
தான், கையொப்பமிட்டு கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது என்பது, கட்சியின் சட்டத்திட்ட விதிமுறைகளுக்கு முரணான செயலாகும். கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் கட்சி விரோத செயல்களுக்கு இந்த பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்
கட்சியின் நன்மை கருதி, கட்சி சட்டத்திட்ட விதி 35-ன்படி, ஓ.பன்னீர்செல்வத்தை உடனடியாக அ.தி. மு.க. பொருளாளர் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைப்பதோடு, இன்று முதல், கட்சி தொண்டர்கள் யாரும் ஓ.பன்னீர்செல்வத்துடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் இந்த பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், அ.தி.மு.க. கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் விரோதமாகவும், கட்சி சட்டத்திட்ட விதிமுறைகளுக்கு முரணாகவும், கட்சியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் செயல்பட்டு வரும் அமைப்பு செயலாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகியோரும், அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவித்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைப்பதோடு, இன்று முதல், தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் இந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருளாளராகதிண்டுக்கல் சீனிவாசன் தேர்வு
அதனை தொடர்ந்து, கட்சியின் வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்து முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசினார். பின்னர், கூட்டத்துக்கு தலைமை தாங்கி அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உரையாற்றினார். நிறைவாக, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அவர் தனது பேச்சின் இறுதியில் கட்சியின் பொருளாளராக முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவித்தார். இத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
தேர்தல் ஆணையத்தில் ஒப்படைப்பு
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களும், ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கம் செய்த சிறப்பு தீர்மானமும் உடனடியாக தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டது.