திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல்: மாவட்ட கவுன்சிலர்கள் 8 பேர் வேட்புமனு தாக்கல்
நெல்லை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலில், மாவட்ட கவுன்சிலர்கள் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நெல்லை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இன்று (சனிக்கிழமை) வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்ப பெற வருகிற 14-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
திட்டமிடும் குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் அதிகாரியாக மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். உதவி தேர்தல் அலுவலர்களாக பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த தேர்தலில் 12 மாவட்ட கவுன்சிலர்களும், 270 பேரூராட்சி கவுன்சிலர்களும், 69 நகராட்சி கவுன்சிலர்களும், 55 மாநகராட்சி கவுன்சிலர்களும் ஆக மொத்தம் 406 பேர் வாக்களிக்க வேண்டும். இதில் மொத்தம் 18 பதவிக்கு மாவட்ட கவுன்சிலர்கள் சார்பில் 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி சார்பில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட கவுன்சிலர்கள் மகேஷ்குமார், சத்தியவாணிமுத்து, அருண் தவசு, சாலமோன் டேவிட், கிருஷ்ணவேணி, தனித்தங்கம், ஜான்சிரூபா, லிங்கசாந்தி ஆகிய 8 பேர் நேற்று மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில், நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தேர்தல் அதிகாரி மகளிர் திட்ட இயக்குனர் சாந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கூறுகையில், ''மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர்களுக்கான 8 இடங்களுக்கு மாவட்ட கவுன்சிலர்கள் 8 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் இவர்கள் 8 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட திட்டக்குழு கூடிய பின்னர் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும்'' என்றார்.