சேலம் மாவட்டத்தில் 6 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்:84 சதவீத வாக்குகள் பதிவு
சேலம் மாவட்டத்தில் 6 உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் 84 சதவீத வாக்குகள் பதிவாகின.
6 பதவிகளுக்கு தேர்தல்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி சேலம் மாவட்டத்தில் சேலம் ஊராட்சி ஒன்றியம் 8-வது வார்டு உறுப்பினர் உள்பட 12 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், தெத்திகிரிப்பட்டி ஊராட்சி 4-வது வார்டு, மின்னாம்பள்ளி ஊராட்சி 3-வது வார்டு, பூவனூர் ஊராட்சி 3-வது வார்டு, புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சி 7-வது வார்டு, எலவம்பட்டி ஊராட்சி 5-வது வார்டு, நீர்முள்ளிகுட்டை ஊராட்சி 6-வது வார்டு ஆகிய 6 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு ஏற்கனவே போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனால் மீதமுள்ள 6 பதவிகளுக்கு மட்டும் நேற்று தேர்தல் நடைபெற்றது.
வாக்காளர்கள் ஆர்வம்
சேலம் ஊராட்சி ஒன்றியம் 8-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் முருகன், பா.ம.க. சார்பில் சகாதேவன், அ.ம.மு.க. சார்பில் சுப்ரமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வெங்கடேஸ்வரனுக்கு உள்கட்சி பிரச்சினையால் இரட்டை இலை சின்னம் கிடைக்காததால், அவர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். மொத்தம் 16 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆண்டிப்பட்டி, வேடுகத்தாம்பட்டி ஆகிய 2 ஊராட்சிகளில் 10 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
உடல் வெப்ப பரிசோதனை
இந்த தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முககவசம், கையுறை, சானிடைசர் ஆகியவை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், ஓட்டுபோடுவதற்கு முன்பு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க வாக்குச்சாவடிகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல், நடுப்பட்டி ஊராட்சி 7-வது வார்டு, தேவியாக்குறிச்சி ஊராட்சி 2-வது வார்டு, கிழக்கு ராஜபாளையம் ஊராட்சி 9-வது வார்டு, கூணான்டியூர் ஊராட்சி 7-வது வார்டு, பொட்டனேரி ஊராட்சி 6-வது வார்டு ஆகிய பதவிகளுக்கு நடந்த தேர்தலில் அந்தந்த பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டுபோட்டனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பிறகு 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் ஓட்டுப்போடுவதற்கு ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லாததால் ஓட்டுப்போடவில்லை.
84 சதவீத வாக்கு
மாவட்டத்தில் நடந்த தேர்தலில் ஓட்டு போட மொத்தம் 9 ஆயிரத்து 510 பேர் வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 4 ஆயிரத்து 11 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 977 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலித்தனர் ஒருவர் என மொத்தம் 7 ஆயிரத்து 989 பேர் ஓட்டுப்போட்டனர். இதன்படி மொத்தம் 84 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து அரசியல் கட்சியினரின் முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பெட்டி சீல் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. அன்று பிற்பகலில் முடிவுகள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.