9 வார்டுகளுக்கு நடந்த தேர்தல்: கடம்பூர் பேரூராட்சியில் 65 சதவீதம் வாக்குப்பதிவு
9 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் கடம்பூர் பேரூராட்சியில் 65 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது.
கயத்தாறு:
கடம்பூர் பேரூராட்சியில் 9 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் 65 சதவீதம் வாக்குகள் பதிவானது.
கடம்பூர் பேரூராட்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதன்படி கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 1, 2, 11 ஆகிய வார்டுகளில் இறுதி வேட்பாளர் பட்டியலில் தலா ஒரு சுயேச்சை வேட்பாளர் மட்டும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து பேரூராட்சி தேர்தலை பல்வேறு பிரச்சினை காரணமாக மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து 1, 2, 11-வது வார்டு சுயேச்சை வேட்பாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு, தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்தது. 1, 2, 11-வது வார்டுகளில் சுயேச்சையாக போட்டியிட்டவர்களை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாகவும், மற்ற 9 வார்டுகளுக்கும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை கொண்டு தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து மற்ற 9 வார்டுகளுக்கும் தேர்தல் நடந்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
தேர்தல்
அதன்படி கடம்பூர் பேரூராட்சியில் 9 வார்டுகளுக்கு தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ஜனதா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 9 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
நேற்று காலையில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளில் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
65 சதவீதம் வாக்குப்பதிவு
காலை முதல் மாலை வரை நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் உள்ள 2,470 ஓட்டுகளில் 1,598 வாக்குகள் பதிவானது. இது 65 சதவீதம் ஆகும் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான அபுல்காசிம் தெரிவித்தார்.
தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த வாக்குகள் அனைத்தும் நாளை (சனிக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.