தேர்தல்களில் மட்டும் வாக்குறுதியாய் இடம்பெறுகிறது:மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமையுமா?நீண்டகால எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் விவசாயிகள்
தேர்தல்களில் மட்டும் வாக்குறுதியாக இடம்பெறும் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்கப்படுமா? என்று நீண்டகால எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
முக்கனியில் முதற்கனி என்ற சிறப்பை பெற்றது மாம்பழம். பழங்களில் மாம்பழத்துக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. பல்வேறு மாங்காய், மாம்பழங்களில் இருந்து பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கலாம்.
மா சாகுபடி
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி அல்லிநகரம், போடி, கூடலூர், ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாந்தோப்புகள் உள்ளன. இங்கு விளைச்சல் அடையும் மாங்காய், மாம்பழங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. விளைச்சல் அதிகரிக்கும் போது அவற்றை சந்தைப்படுத்த வசதிகள் இல்லை. இதனால், விவசாயிகள் வீணாகும் மாம்பழங்களை சாலையோரம் கொட்டி வைப்பதை சீசன் காலங்களில் அதிகம் பார்க்க முடிகிறது.
சந்தைகள், கமிஷன் கடைகளுக்கு கொண்டு சென்றும், சாலையோரம் வைத்தும் விற்பனை செய்வதை தவிர மாற்று வழிவகைகள் விவசாயிகளுக்கு உருவாக்கிக் கொடுக்கப்படவில்லை.
கேராளவுக்கு விற்பனை
பெரியகுளம், போடி பகுதியில் அதிக அளவில் மா சாகுபடி நடக்கிறது. சீசன் ஆரம்பத்தில் கல்லாமை, செந்தூரம் போன்ற ரக மாங்காய்கள் விளைச்சலாகும். இங்கு விளையக்கூடிய கல்லாமை ரக மாங்காய்கள் ஜூஸ் தயாரிப்பதற்காக கிருஷ்ணகிரி, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பிற ரக மாங்காய்கள் பெரும்பாலும் கேரளாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேரளாவில் இருந்து வியாபாரிகள் நேரடியாக பெரியகுளத்திற்கே வந்து மாங்காய்களை கொள்முதல் செய்து கொள்வார்கள். இருப்பினும் பெரியகுளத்தில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் லாரிகளில் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
தொழிற்சாலை
இதனால் போக்குவரத்து செலவு அதிகரிப்பதுடன், விவசாயிகள் மிகவும் பாதிப்பு அடைகின்றனர். எனவே மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று மா விவசாயிகள் அரசுக்கு பல்லாண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை தொழிற்சாலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சுமார் 20 ஆண்டுகாலகட்டத்தில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களின் போது, மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும் என்பது வேட்பாளர்களின் பிரதான கோரிக்கையாக இருந்துள்ளது. ஆனாலும், இதுவரை அது கோரிக்கையாகவும், தேர்தல் காலத்துக்கு தேவைப்படும் வாக்குறுதியாகவுமே இருந்து வருகிறது.
வேலைவாய்ப்புகள்
மாம்பழக்கூழ் மற்றும் இதர மதிப்புக்கூட்டப்பட்ட தொழிற்கூடம் அமைக்கப்பட்டால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள். ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகும். பெரியகுளம் பகுதியை பொறுத்தவரை விவசாயம் தவிர்த்து இதர வேலைவாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால், மக்கள் வாழ்வாதாரம் தேடி திருப்பூர், கோவை பகுதிகளுக்கு செல்கின்றனர்.
எனவே பெரியகுளத்தில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை, மாங்காய் குளிர்பதன கிட்டங்கி, மாங்காய் மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடு்த்தனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
மாம்பழக்கூழ் ெதாழிற்சாலை
மணி கார்த்திக் (விவசாயி):- பெரியகுளம் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் கணக்கில் மாமரங்கள் உள்ளன. இங்கு விளையக்கூடிய மாங்காய்களை சுமார் 200 முதல் 300 கிலோ மீட்டர் தூரம் சென்று விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. பெரியகுளத்தில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை இருந்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். எனவே விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பெரியகுளத்தில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்பாஸ் (வியாபாரி):- பெரியகுளம் பகுதியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க கடந்த 30 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். ஆனால் இதுவரை தொழிற்சாலை கொண்டு வர முடியவில்லை. மேலும் தேனி மாவட்டத்தில் மாங்காய் விற்பனைக்காக மார்க்கெட் வசதி கூட இல்லை. இதனால் மா விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பெரியகுளம் பகுதியில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க அரசுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். எனவே விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.
குளிர்பதன கிட்டங்கி
பிரபாகரன் (மா விவசாயி):- பெரியகுளத்தில் மா விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மாங்காய்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க கூட இடமில்லை. இதனால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் சீசன் நேரங்களில் மாங்காய்கள் அதிக அளவில் வீணாகின்றன. இதன் காரணமாக விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது. எனவே மாங்காய்களை பாதுகாப்பாக வைக்க மா பதனிடும் குளிர்சாதன கிட்டங்கி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாம்பழ கூழ் தொழிற்சாலையும் அமைக்க வேண்டும்.
ராஜபாண்டி (மா விவசாயி, உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர்):- பெரியகுளத்தில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அரசியல் கட்சியினர் தொடர்ந்து வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாங்காய்களை மதிப்பு கூட்டப்பட்டு விற்பனை செய்வதன் மூலம் மாங்காய்களுக்கு கூடுதலான விலை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் பெரியகுளம் பகுதியில் இருந்து மாங்காய்களை விற்பனைக்காக பிற பகுதிக்கு கொண்டு செல்லும் போது போக்குவரத்து செலவு அதிகரிப்பதுடன் இடைத்தரகர்கள் அதிக வருமானத்தை ஈட்டுகின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே அரசு மாம்பழ கூழ் தொழிற்சாலை தொடங்கினால் விவசாயிகளுக்கு நிர்ணயமான விலை கிடைக்கும். இதனால் விவசாயிகள் தொடர்ந்து பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.