வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்
குளித்தலை-வேலாயுதம்பாளையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடந்தது.
சிறப்பு சுருக்க திருத்த முகாம்
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி மற்றும் கிராம பகுதி உள்பட குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 269 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்கள் நடந்தது. இந்த முகாமில் புதிய வாக்காளர்கள் பலர் தங்கள் பெயர்களை சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.
அதுபோல ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது பெயர்களை, முகவரிகளையும் திருத்தம் செய்யவும், பலர் விண்ணப்பித்தனர். 2 நாட்களாக நடைபெற்ற இந்த முகாம்களில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், உள்ளிட்ட பல அரசியல் கட்சி முகவர்கள் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கவும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை கண்டறிவதிலும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு உதவியாக இருந்தனர்.
ேவலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் காந்தி மண்டபம், காந்தியார் தொடக்கப்பள்ளி, புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
ஈ.ஐ.டி பாரி தொடக்கப் பள்ளி, அய்யம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம் உள்பட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைபெற்றது.
முகாமில், பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்பட பல்வேறு திருத்தங்கள் செய்தல் போன்றவை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.
நொய்யல்
ெநாய்யல் சேமங்கி அரசு தொடக்கப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, குந்தாணி பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, குறுக்குச்சாலை அண்ணாநகர்அரசு தொடக்கப்பள்ளி, நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, ஓலப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, நடையனூர் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைபள்ளி உள்ளிட்ட உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம் 2-வது நாளாக நடைபெற்றது. முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி திருத்தம், மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்காக படிப்புச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் இணைத்து வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்கினர்.