'ஷாக்' அடிக்கும் புதிய கட்டண 'பில்'; மின்சார கட்டணம் மாதந்தோறும் வசூலிக்க கோரிக்கை
‘ஷாக்' அடிக்கும் புதிய கட்டண ‘பில்'லால் மின்சார கட்டணம் மாதந்தோறும் வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது.
400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 என்ற வீதத்திலும், 1,000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என்ற வீதத்திலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது.
அதன்படி 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.55 வரையும், 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.1,130 வரையும் கட்டணம் உயர்ந்து இருக்கிறது.
தத்தளிக்கிறது
மின்சார வாரியம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 226 கோடி கடனில் தத்தளிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டியது கட்டாயமாகிவிட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இருந்தாலும் மின்கட்டண உயர்வு 'ஷாக்' தருவதாக உணர்ந்து இருக்கும் பொதுமக்கள், கட்டணம் வசூலிக்கும் முறையையாவது மாற்றி அமைக்கக்கூடாதா? என்ற மனநிலைக்கு வந்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தற்போது மின்சார கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டணம் கிடையாது.
200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வுக்கு பிறகு ரூ.225 வசூலிக்கப்படுகிறது.
400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.1,125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மாதந்தோறும்...
2 மாதங்களுக்கு ஒரு தடவை கணக்கிடும் இந்த முறைக்கு பதிலாக மாதம் ஒரு தடவை கணக்கிடும் முறையை கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது.
ஏன் என்றால்? உதாரணமாக ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மாதத்திற்கு 100 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள்?
தற்போது அவர் ரூ.225 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கிறது. மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் கட்டணம் செலுத்த தேவை இருக்காது.
ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துகிறார் என்றால் அவருக்கு மாதத்திற்கு 200 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள்.
தற்போது 400 யூனிட்டுக்கு அவர் ரூ.1,125 செலுத்த வேண்டும். மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் ரூ.225 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும்.
இதனால்தான் மாதந்தோறும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.
இதுபற்றியும், மின்சார கட்டண உயர்வு பற்றியும் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு தரப்பினர் கூறிய கருத்துகள் வருமாறு:-
மூலபொருட்கள் விலை உயர்வு
கார்த்திகேயன் (வணிகர், பழனி):- மின்சாரமே அனைத்து தொழில்களுக்கும் முக்கிய ஆதாரம். எனவே மின்கட்டண உயர்வால் அனைத்து தொழில்களின் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. அதன்மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். எனவே மாதந்தோறும் மின்கட்டணத்தை வசூலிக்கும் முறையை அமல்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் மின்கட்டணத்தை குறைப்பதோடு, எளிதாக செலுத்தும் வசதியை உருவாக்க வேண்டும். மேலும் மின்சாரம் வீணாவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்டோ டிரைவர் சரவணன் (கோபால்பட்டி எஸ்.கொடை):- முன்பு மின்கட்டணம் செலுத்துவதற்கு 20-ந்தேதி கடைசி நாள் என்று இருந்தது. அதை கணக்கிட்டு மின்சார கட்டணத்தை செலுத்தி வந்தேன். தற்போது கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். வீட்டில் நாம் இல்லாத நேரத்தில் மின்கட்டணம் கணிக்கீடு செய்தால், அது நமக்கு தெரியாமல் போய்விடுகிறது. பலருக்கு செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வருவது இல்லை. இதனால் அபராதத்துடன் கட்டணத்தை செலுத்தும் நிலை உள்ளது. நான் ரூ.37 மின்கட்டணத்துக்காக அபராதத்துடன் சேர்த்து ரூ.142 செலுத்தி இருக்கிறேன். இந்த குழப்பத்துக்கு தீர்வு காண வேண்டும். மேலும் மாதந்தோறும் மின்கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
மாதந்தோறும் வசூல்
சந்தனபிரியா (திண்டுக்கல் கருணாநிதிநகர்):- 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் கணக்கீடப்படுவதால் மின்கட்டணம் அனைவருக்கும் அதிகமாக தான் வந்துள்ளது. இதனால் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு தண்ணீருக்கு என்று தனியாக கட்டணம் கேட்கின்றனர். ஒருசில ஓட்டல்களில் இட்லி, தோசை விலையை கூட உயர்த்திவிட்டனர். இதுபற்றி கேட்டால் மின்கட்டணம் அதிகமாக வருவதாக கூறுகின்றனர். மின்கட்டண உயர்வு பலவழிகளில் மக்களின் செலவை அதிகரிக்கிறது. எனவே மாதந்தோறும் மின்கட்டணத்தை வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
மணிகண்டன் (தாடிக்கொம்பு):- மின்கட்டண உயர்வால் சிறு, குறு வியாபாரிகளை பெரிதும் பாதித்து இருக்கிறது. பொதுமக்களை பொருத்தவரை முன்பு அதிகபட்சமாக ரூ.500 முதல் ரூ.1,000 வரை கட்டணமாக செலுத்தினர். தற்போது மின்கட்டணமாக ரூ.2 ஆயிரம் வரை செலுத்த வேண்டியது இருக்கிறது. இதனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கூடுதல் செலவு ஏற்படுகிறது. மாதந்தோறும் மின் கணக்கீடு செய்தால், கட்டணம் குறைந்து விடும். எனவே அதை பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.