கடலூரில், பாதாள சாக்கடை திட்ட நிலையத்தில் மின் மோட்டார் பழுது: வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு பொதுமக்கள் தவிப்பு
கடலூரில் பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் ஏற்று நிலையத்தில், மின் மோட்டார் பழுதானதால் வீடுகளை சுற்றி கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
கடலூர் மாநகராட்சி பகுதியில் 45 வார்டுகள் உள்ளன. இதில் ஒரு சில வார்டுகளை தவிர பெரும்பாலான வார்டுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வார்டுகளில் உள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆங்காங்கே பிரதான கழிவுநீர் ஏற்று நிலையங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
அதன்படி கடலூர் வண்ணாரப்பாளையம் கே.கே.நகர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கடலூர் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் பிரதான கழிவுநீர் ஏற்று நிலையம் ரூ.65 கோடியே 14 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இங்கு வார்டுகளில் உள்ள கழிவு நீர் வந்து, சுத்திகரித்து ராட்சத குழாய்கள் மூலம் வெளியேற்றப்படும். ஆனால் அங்குள்ள மின் மோட்டார் கடந்த 2 வாரமாக பழுதாகி விட்டது. இதனால் கழிவுநீர் அனைத்தும் நீரேற்று நிலையத்திற்குள் செல்லாமல் கே.கே.நகர் பகுதியில் வெளியேறி வருகிறது.
சுகாதார சீர்கேடு
தற்போது, அந்த பகுதியில் குட்டை போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கெடு ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இது பற்றி அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், இது வரை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். ஆகவே தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற இங்கு பழுதான மின் மோட்டாரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர் களின் கோரிக்கையாகும்.