பென்னாகரம் மின்வாரிய அலுவலகத்தில் மின்சாரம் தாக்கி பெண் காயம்
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சி காட்டாம்பட்டி கொட்டாயை சேர்ந்தவர் ராமன். இவருடைய மனைவி சின்னபாப்பா (வயது 42). இவர் மின் கட்டணம் செலுத்தவும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவும், பென்னாகரத்தில் உள்ள துணை மின்வாரிய அலுவலகத்துக்கு வந்தார். அங்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஜன்னல் கம்பியை அவர் பிடித்தார். திடீரென அவரை மின்சாரம் தாக்கியதில், தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் சின்னபாப்பாவை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மின்வாரிய அலுவலகத்தில் மின்சாரம் தாக்கி பெண் காயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.