திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி  தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

மீன்சந்தை தொழிலாளி

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் (வயது 62). இவர் அந்த பகுதியில் உள்ள மீன்சந்தையில் கணக்கெழுதும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.

இந்தநிலையில் ஜான்சனின் உறவினர் திருமணம் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள வேதநகரில் நேற்று நடந்தது. இந்த திருமணத்துக்காக ஜான்சன் தனது குடும்பத்தினருடன் ரெயில் மூலம் நேற்று காலை நாகர்கோவில் வந்தார். பின்னர் வேதநகரில் திருமணம் நடைபெற இருந்த வீட்டுக்கு வந்த அவர் பின்பக்கம் அமைக்கப்பட்டிருந்த பந்தல் பகுதியில் பல்துலக்க சென்றதாக கூறப்படுகிறது.

மின்சாரம் தாக்கி சாவு

அப்போது அங்கு டியூப்லைட் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பத்தில் கை வைத்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் கம்பத்தில் மின்கசிவு இருந்துள்ளது. இதை அறியாத ஜான்சன் கை வைத்ததும் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மயக்க நிலைக்கு சென்றார்.

இதனை பார்த்த திருமண வீட்டார் அலறியடித்தபடி ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் ஜான்சனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து ஜான்சன் குடும்பத்தினர் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எளிய முறையில் திருமணம்

இந்த சம்பவம் குறித்து ஜான்சனின் மகன் ஜார்ஜ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண வீட்டில் ஜான்சன் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் திருமண வீட்டாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சோக சம்பவத்தின் காரணமாக ஆடம்பரமாக நடைபெற இருந்த திருமணம் எளிய முறையில் நடந்தது.


Next Story