தரைமட்ட நீர்த்தேக்கதொட்டிக்கு மின்இணைப்பு வழங்க வேண்டும்


தரைமட்ட நீர்த்தேக்கதொட்டிக்கு மின்இணைப்பு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே எழுவேலியில் தரைமட்ட நீர்த்தேக்கதொட்டிக்கு மின்இணைப்பு வழங்கவேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே எழுவேலியில் தரைமட்ட நீர்த்தேக்கதொட்டிக்கு மின்இணைப்பு வழங்கவேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்றியக்குழு கூட்டம்

குத்தாலத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆணையர் உமாசங்கர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

கண்ணன் (எ) ராமச்சந்திரன் (தி.மு.க.):- மாந்தை ஊராட்சி ராமாபுரம் சுடுகாடு சாலையை தார்சாலையாக புதிதாக அமைக்க வேண்டும். ஏ.கிளியனூர் குடியான நடுத்தெரு சிமெண்டு சாலையை சீரமைக்க வேண்டும். ராஜவள்ளி(தி.மு.க.):- திருவாலங்காடு ஊராட்சியில் உள்ள மடவிளாகத்தெருவில் மழைக்காலங்களில் நீர் தேங்குவதால் புதிதாக மழை நீர் வடிகால் அமைத்து தர வேண்டும். காவேரி மேட்டு தெருவில் உடைந்த நிலையில் உள்ள மதகை புதிதாக கட்டித்தர வேண்டும்.

புதிய சமுதாயக்கூடம்

வசந்தகோகிலம் (தி.மு.க.):- பெருஞ்சேரியில் தாய்,சேய் விடுதி பழுதடைந்துள்ளது.அதை சீரமைக்க வேண்டும். சிவகுமார் (பா.ம.க.):- கோனேரி ராஜபுரம் ஊராட்சியில் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும். வைகல் கிராமத்தை தலைமை இடமாக கொண்டு கோனேரிராஜபுரத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். கிராம சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

வினோத்(பா.ஜ.க.):- கோமலில் புதிய சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டும். எழுவேலியில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு ஊராட்சி நிர்வாகம் மின் இணைப்பு வழங்காமல் அலட்சியம் காட்டி வருகிறது.அதை உடனடியாக வழங்க வேண்டும்.

புதிய தடுப்பணை

ராஜா(தி.மு.க.):- அரையபுரம் மெயின் ரோட்டில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி வேகத்தடை அமைக்க வேண்டும். பாஸ்கரன்(அ.தி.மு.க):- சேத்தூர் மாரியம்மன் கோவில் குளத்துப்பகுதியில் புதிய தடுப்பணை கட்ட வேண்டும். ரமேஷ்(தி.மு.க.):- தத்தங்குடியில் சேதமடைந்துள்ள அங்காடியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும். ராஜேஸ்வரி (தி.மு.க.):- அஞ்சாறுவார்த்தலையில் உள்ள மதுபான கடையினால் அதிகமாக விபத்துச் ஏற்படுவதால், மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்.

தலைவர்:- அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் பாரபட்சமின்றி ஏற்கப்பட்டு நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story