தையல் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் -சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்
தையல் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் -சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்
கோத்தகிரி
கோத்தகிரி தாலுக்கா தையல் கலைஞர்கள் சங்கத்தின் 3-ம் ஆண்டு பேரவைக் கூட்டம் கோத்தகிரியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ஜடா ஹெலன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வாசு, செயலாளர் சோழா மகேஷ், தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட பொறுப்பாளர் வர்கீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுமக்கள் நலன் கருதி கோத்தகிரி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். தையல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். நல வாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதிய தொகையை மாதம் தோறும் முழுமையாக வழங்க வேண்டும். கோத்தகிரி பகுதியில் உள்ள படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக, கோத்தகிரியில் தொழிற்சாலை நிறுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடந்து நடப்பாண்டின் புதிய தலைவராக பாலன், செயலாளராக சுதா முருகன், பொருளாளராக பாண்டியராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பேரவைக் கூட்டத்தில் கோத்தகிரி தாலூக்காவை சேர்ந்த ஏராளமான தையல் கலைஞர்கள் கலந்துக் கொண்டனர்.