ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா?; பொதுமக்கள் கருத்து
ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
'எத்தனை நாளா செல்கிறேன், கடைசி தேதி வரைக்கும் இருக்காதீங்கனு, ரீடிங் எடுத்த உடனேயே போய் பணத்தை கட்டுங்க, கட்டுங்கன்னு சொன்னா கேட்டாத்தானே!'
'நம்ம வீட்டுக்கு கரண்ட் பில் கட்ட இன்றைக்குத்தான் கடைசி நாளு, சாயந்திரத்துக்குள்ள பணத்தை கட்டலைனா, பியூசை புடுங்கிட்டு போய்விடுவாங்க, பிறகு இருட்டுலதான் கிடக்கணும். புரியாத மனுஷனா இருக்கிறாரே!'
இப்படி பல இல்லங்களில் இல்லத்தரசிகள் கணவன்மார்களை கடிந்துகொள்வதைக் கேட்டு இருக்க முடியும்.
முன்பெல்லாம் கரண்ட் பில் கட்டுவதாக இருந்தால் மின்சார வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்களில் போய்த்தான் பணம் கட்ட வேண்டும். ஆன்லைன் முறை வந்த பிறகு அதிக மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பில் வந்தால் ஆன்லைனில் செலுத்த வாரியம் அறிவுறுத்தியது. அதன்படி தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் அதைப் பின்பற்றி வந்தனர்.
ஆன்லைனில் மின்கட்டணம்
இதில் படித்த சிலர் எவ்வளவு ரூபாய் கரண்ட் பில் வந்தாலும் கவுண்ட்டர்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தப்படி ஆன்லைனிலேயே பணத்தைக் கட்டி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கரண்ட் பில் கட்டுபவர்கள் ஆன்லைனில்தான் கட்ட வேண்டும் என்று வாரியம் அறிவுறுத்தியது. இதனையும் பலர் பின்பற்றி வந்தனர்.
இந்தநிலையில் தற்போது ரூ.1,000 பில் வந்தாலே ஆன்லைனில் தான் கட்டவேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.
இதுபற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், மின்சார வாரிய அதிகாரிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
சாதாரண செல்போன்
க.புதுப்பட்டியை சேர்ந்த ஜீப் டிரைவர் அருள்:- எனது வீட்டுக்கு மின்சார கட்டணம் ரூ.300-க்குள் தான் வருகிறது. அதனை மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று செலுத்தி வருகிறேன். தற்போது ரூ.1,000-க்கு மேல் கரண்ட் பில் வந்தால் ஆன்லைனில் தான் கட்ட வேண்டும் என்று கூறுவது கிராமப்புற பகுதிகளில் நடைமுறைக்கு சாத்தியப்படுமா? என்று பார்க்க வேண்டும். ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டும் என்றால் சாதாரண செல்போன் வைத்திருக்கும் மக்களால் இயலாது. எனவே ஆன்லைனில் செலுத்தும் திட்டம் நல்ல திட்டம் என்ற போதிலும், நேரடியாக அலுவலகத்துக்கு செல்லும் நடைமுறையையும் தொடர வேண்டும். கிராமங்கள் தோறும் மின்வாரியம் சார்பில் கட்டணம் செலுத்தும் மையம் அமைக்க முடியாது. அதே நேரத்தில், கிராமங்கள் தோறும் உள்ள தபால் அலுவலகங்களிலும் மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.
ஊராட்சிகளில் சேவை மையங்கள்
கம்பத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சதீஷ்குமார்:- ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்துவது என்பது நல்ல திட்டம் தான். எதிர்காலத்தில் எல்லாம் ஆன்லைன்மயமாகி விடவே வாய்ப்பு இருக்கிறது. மின்வாரிய ஊழியர்களுக்கும் பணிச்சுமை குறையும். அதே நேரத்தில், ஏற்கனவே சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன. மின்கட்டணம் செலுத்த முயற்சிக்கும் போது சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை மக்கள் பறிகொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. கணினி மையங்களுக்கு சென்று மின்கட்டணம் செலுத்தச் சென்றால் சேவைக் கட்டணம் வசூலிக்கிறார்கள். சில செயலிகள் மூலம் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் போது சேவை கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. எனவே, மின்கட்டணத்தை எந்த வழியில் செலுத்தினாலும் சேவை கட்டணம் இல்லாத சூழல் ஏற்பட வேண்டும். அதற்கு ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சேவை மையங்கள் தொடங்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மக்களுக்கு பயனுள்ளது
மின்வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, "ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்துவது மக்களுக்கு பயனுள்ளது. வீட்டில் இருந்தபடியே கட்டணம் செலுத்திவிடலாம். ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்துவது தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மின்கட்டண வசூல் மையங்களிலும் இதுதொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஏழை-எளிய மக்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதேபோல், அவர்களுக்கு அதிக அளவில் மின்கட்டணம் வருவதும் இல்லை. அவர்கள் ஆன்லைன் மூலமும் கட்டலாம், கட்டண வசூல் மையங்களிலும் செலுத்தலாம். அதிக மின்பயன்பாடு உள்ள இணைப்புகளுக்கு தான் ரூ.1,000-க்குமேல் மின்கட்டணம் வர வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் மக்கள் செல்போன் ரீசார்ஜ், தொலைக்காட்சி இணைப்பு போன்றவற்றை ஆன்லைன் மூலம் செய்து வருகிறார்கள். அதற்காக கடைக்கு தேடிச் செல்பவர்கள் மிகவும் குறைவு. எனவே, இந்த திட்டமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும். மக்களிடம் பயன்பாடும் அதிக அளவில் காணப்படும். இதன்மூலம் மின்வாரிய ஊழியர்களுக்கும் பணிச்சுமை குறையும். கட்டணம் செலுத்துவதில் எந்த முறைகேடுகளும் நடக்க வாய்ப்பு இல்லை. ஆன்லைன் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு எப்போது பணம் செலுத்த வேண்டும் என்ற விவரம் முன்கூட்டியே குறுஞ்செய்தியாக வந்து விடும். எனவே, அது அவர்கள் நியாபக மறதியால் மின்கட்டணம் செலுத்தாமல் இருப்பதை தவிர்க்கவும் உதவும்" என்றனர்.