மின்சார கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கலாமே!


மின்சார கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கலாமே!
x

தமிழ்நாட்டில் கடந்த மாதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 என்ற வீதத்திலும், 1,000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என்ற வீதத்திலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.55 வரையும், 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.1,130 வரையும் கட்டணம் உயர்ந்து இருக்கிறது.

புதுக்கோட்டை

தத்தளிக்கிறது

மின்சார வாரியம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 226 கோடிக்கு கடனில் தத்தளிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டியது கட்டாயமாகிவிட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இருந்தாலும் மின்கட்டண உயர்வு 'ஷாக்' தருவதாக உணர்ந்து இருக்கும் பொதுமக்கள், கட்டணம் வசூலிக்கும் முறையையாவது மாற்றி அமைக்கக்கூடாதா? என்ற மனநிலைக்கு வந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது மின்சார கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது. 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டணம் கிடையாது. 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வுக்கு பிறகு ரூ.225 வசூலிக்கப்படுகிறது. 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.1,125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மாதந்தோறும்

2 மாதங்களுக்கு ஒரு தடவை கணக்கிடும் இந்த முறைக்கு பதிலாக மாதம் ஒரு தடவை கணக்கிடும் முறையை கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது.

ஏன் என்றால்? உதாரணமாக ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மாதத்திற்கு 100 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள்?

தற்போது அவர் ரூ.225 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கிறது. மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் கட்டணம் செலுத்த தேவை இருக்காது.

ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துகிறார் என்றால் அவருக்கு மாதத்திற்கு 200 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள்.

தற்போது 400 யூனிட்டுக்கு அவர் ரூ.1,125 செலுத்த வேண்டும். மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் ரூ.225 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும்.

இதனால்தான் மாதந்தோறும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.

இதுபற்றியும், மின்சார கட்டண உயர்வு பற்றியும் பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்து வருமாறு:-

மின்சார கட்டண உயர்வு பெரும் சுமை

குடும்ப தலைவி தில்லைநாயகி:- ''எங்கள் வீட்டில் கடந்த முறை மின்சார கட்டணம் 360 யூனிட்டிற்கு ரூ.710 செலுத்தினோம். தற்போது 330 யூனிட்டிற்கு ரூ.819 செலுத்தியுள்ளோம். இதில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நாங்கள் வீட்டில் இல்லை. அதனால் மின்சாரம் பயன்படுத்தப்படவில்லை. தற்போது புதிய கட்டணம் 2 மடங்காக உயர்ந்ததை போல உள்ளது. இதனால் தற்போது மின்சார சிக்கனத்தை கடைப்பிடிக்க தொடங்கி உள்ளோம். மின்விசிறி பயன்பாடு ஒன்றை குறைப்பது உண்டு. இருப்பினும் குழந்தைகள் படிப்பிற்கு மின்விளக்குகள் அவசியம் என்பதால் லைட் பயன்பாடுகளை குறைக்க முடியாது. ஏற்கனவே விலைவாசி உயர்வு இருந்து வருகிற நிலையில் தற்போது மின்சார கட்டணம் உயர்வு எங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்ற நிலையில் மாதம் ஒரு முறை மின்சார கட்டணம் கணக்கிட்டு வசூலித்தால் பயனுள்ளதாக இருக்கும். கொஞ்சம் கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளது. தோ்தல் நேரத்தில் மாதம் ஒரு முறை மின்சார கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும் என இந்த அரசு அறிவித்திருந்தது. அதனை செயல்படுத்த வேண்டும்'' என்றார்.

கட்டணத்தை குறைக்க நடவடிக்கை வேண்டும்

சிறு ஓட்டல் உரிமையாளர் அடைக்கன்:- ''எனது கடையில் இதற்கு முன்பு ரூ.600 வரை மின் கட்டணம் வரும். தற்போது ரூ.1,414 வரை மின் கட்டணம் செலுத்தினேன். மின்சார கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஏற்கனவே சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு உள்ள நிலையில் தற்போது மின்சார கட்டணம் உயர்வு பாதிப்படைய செய்துள்ளது.

மின்சார கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதம் ஒரு முறை மின்சார பயன்பாட்டு அளவு கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்க வேண்டும். அப்போது தான் மின்சார கட்டண தொகை பெருமளவு செலுத்துவது சற்று குறையும்'' என்றார்.

மாத மின் கணக்கீட்டால் கட்டண சுமை குறையும்

கறம்பக்குடி அக்ரஹாரத்தை சேர்ந்த வெங்கடேஷ்:- மின்கட்டண உயர்வு சாமானிய மக்களை பாதிக்காது என கூறப்பட்டது. ஆனால் மாத சம்பளம் வாங்கும் சராசரி குடும்பத்தை சேர்ந்தவர்கள், சிறு வியாபாரிகள் என பலரும் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

2 மாதங்களுக்கு 300 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பத்துக்கு ஏற்கனவே ரூ.900 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.1300 கட்டணமாக செலுத்த வேண்டி உள்ளது. இதேபோல் வணிக பயன்பாட்டிற்கு 100 யூனிட்டை தாண்டினாலே அடிப்படை கட்டண விகிதம் கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. மின் நுகர்வின் அளவிற்கு ஏற்ப கட்டண விகிதம் அதிகரிக்கிறது. மாதம்தோறும் மின் கணக்கீடு செய்தால் நுகர்வின் அளவு குறைந்து அடிப்படை கட்டண விகிதமும் குறையும். இதனால் இந்த பெரும் சுமை சற்று குறையும். நுகர்வோரும் சிரமம் இன்றி மின்கட்டணத்தை செலுத்தலாம். எனவே தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிப்படி மின்கட்டணத்தை மாதம் தோறும் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

2 மாத கட்டணமே சிறந்தது

கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது லாபிர்:- தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் 2 மாதத்திற்கு ஒருமுறை வசூலிக்கப்படும் மின் கட்டணம் மாதம் மாதம் வசூலிக்கப்படும் என்று கூறினர். ஆனால் 2 மாதத்திற்கு ஒரு முறை மின்சார கட்டணம் செலுத்துவது தான் கிராமப்புற மக்களுக்கு சிறந்தது. ஏனென்றால் 2 மாதத்திற்கு ஒருமுறை வசூலிக்கப்படும் மின் கட்டணத்தையே பொதுமக்கள் கால அவகாசத்துக்குள் கட்டாமல் பின்னர் சென்று அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். அரசு அறிவித்தது போல் மாதா மாதம் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் செலுத்த மாட்டார்கள்.

இதனால் அபராத தொகையுடன் செலுத்தும் நிலை அதிகமாகும். இதனால் கிராமப்புற பொதுமக்கள் மிகவும் பாதிப்படைவார்கள். அதுபோல 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் மக்களிடம் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இது 2 மாதத்திற்கு ஒருமுறை வசூலிக்கப்படும் முறைக்கு தான் பொருந்தும். ஆகவே 2 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் முறையே சிறந்தது என்றார்.

தனியார் நிலப்பகுதியில் தைல மரங்கள் வளர்க்க

இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை கட்டணமாக்க வேண்டும்

அரிமளத்தை சேர்ந்த ராமமூர்த்தி:- புதிய மின்கட்டணம் அமல்படுத்தப்படுவதற்கு முன் நான் உபயோகப்படுத்திய 480 யூனிட்டுக்கு ரூ.980 கட்டணம் விதிக்கப்பட்டது. புதிய கட்டண உயர்வுக்கு பிறகு 480 யூனிட்டுக்கு ரூ.1,601 கட்டணம் வருகிறது. 450 லிருந்து 480 யூனிட்டுக்கு அதாவது கூடுதலாக 30 யூனிட் பயன்பாட்டிற்கு ரூ.621 கூடுதலாகியுள்ளது. மேலும் இது 501 யூனிட் என்றானால் மேலும் ரூ.400 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. ஏற்கனவே மின் சிக்கனத்தை கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் வீட்டிற்கு வெளியே எரியவிடப்படும் மின் விளக்குகளை இரவு 7 மணிக்கெல்லாம் அணைத்துவிடவேண்டிய நிலை உள்ளது. வாஷிங் மெசின், ஹீட்டர், ஏ.சி. என தற்காலத்திற்கு அத்தியாவசியம் என்ற போதிலும் மின் கட்டண உயர்வை நினைத்து உபயோகப்படுத்த இயலாத நிலைக்கு சென்றுவிட்டது. எனவே மாதம் ஒரு முறை மின் கணக்கீடு மேற்கொள்வதன் மூலம் இப்போதைய உயர்த்தப்பட்ட கட்டணத்தின்படி கணக்கீடு செய்தாலும் மிகக்குறைவான தொகையே மின் கட்டணமாக செலுத்தவேண்டி வரும். தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் நிலப்பகுதியில் தைல மரங்கள் மற்றும் வீரிய சவுக்கு போன்ற உணவுப்பயிரில்லாத விவசாய நிலங்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை கட்டண மின்சாரமாக மாற்றப்படுவதால் மின்சார விரயம் தடுக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு என்னால் அனுப்பப்பட்ட கோரிக்கை மனு மின்வாரியத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்

7 லட்சத்து 20 ஆயிரம் மின் இணைப்புகள்

புதுக்கோட்டை மாவட்ட மின்சார வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி, கீரனூர் ஆகிய மின்சார வாரிய கோட்ட அலுவலகங்கள் உள்ளது. இதில் இருந்து மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் மின் நுகர்வோர்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்து 60 ஆயிரம் மின் இணைப்புகள் வீட்டு உபயோகத்திற்கு ஆகும். மீதமுள்ளவை தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு சார்ந்த கட்டிடங்கள் உள்பட வணிக பயன்பாட்டிற்குரியதாகும். இதில் அரசு அறிவித்துள்ளப்படி மின் கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த 8 ஆண்டுகளுக்கு பின் தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணத்தின் படி மின் நுகர்வோர்கள் தற்போது மின்சார கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்'' என்றார்.


Next Story