மின் கட்டணம் அதிகமாக வந்ததால் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகை


மின் கட்டணம் அதிகமாக வந்ததால் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகை
x

நாட்டறம்பள்ளி அருகே மின்கட்டணம் அதிகமாக வந்ததால் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

அதிகமான மின் கட்டணம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் துணை மின் நிலையமும், அதன் அருகில் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகமும் செயல்படுகிறது. இந்த மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சந்திரபுரம், மல்லபள்ளி, வெலக்கல்நத்தம், பஞ்சாயத்து உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மின்கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக இந்த முறை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மின்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

முற்றுகை- மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த மூன்று பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெலக்கல்நத்தம் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உதவி செயற்பொறியாளர் பிரபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் திடீரென ஜெயபுரம் வழியாக வெலக்கல்நாத்தம் செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது மின்துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story