பொதுப் பயன்பாட்டுக்கு மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 வசூல் ஆடிப்போன அடுக்குமாடி வாசிகள்
பொதுப் பயன்பாட்டுக்கு மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 வசூல் செய்யப்படுவதால் அடுக்குமாடி வாசிகள் ஆடிப்போய் உள்ளனா்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் மோட்டார்கள், கார் நிறுத்தம், படிக்கட்டுகள் மற்றும் பொது இடங்களில் எரியும் மின்விளக்குகள், எந்திர 'லிப்ட்'கள் போன்றவைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தைக் காட்டிலும் இது கடுமையாக இருப்பதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.
மின்சாரக் கட்டண உயர்வு
புதிய மின்சாரக் கட்டண உயர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது.
நாம் கட்டுகிற மின்சாரக் கட்டணம், நமக்கு அரசு தருகிற மானியம் ஆகியவை மூலமாக தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.65 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.
மின்சாரம் கொள்முதல் செய்வது, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவது போன்ற செலவினங்களுக்காக மின்வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.77 ஆயிரம் கோடி தேவைப் படுகிறது.
இவ்வாறு வரவுக்கு மீறி செலவாகிவருவதால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் மின்வாரியம், சற்று அதில் இருந்து மீளுவதற்காக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு மின்சார ஒழுங்கு முறை ஆணையமே முன்வந்து, 15 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. அதன்பின்னர், எந்தவித கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.
தற்போது தமிழகத்தில் புதிய மின் கட்டணத்தை 34 சதவீதம் உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.
இந்த புதிய மின்கட்டண உயர்வால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணம் கிடையாது. அதற்கு மேல் பதிவாகும் யூனிட்டுகளுக்கு உயர்த்தப்பட்ட இந்த புதிய மின் கட்டணம் பொருந்தும்.
இதனால் முன்பு இருந்த கட்டணத்தைவிட, குறைந்தது ரூ.100 முதல் ரூ.1,000-க்கு மேல் ஒவ்வொருவரும் அதிகமாகச் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.
அடுக்குமாடி வாசிகள் ஆதங்கம்
இதில் இன்னும் ஒருபடி மேலாக, பொதுப் பயன்பாட்டிற்கு மின் இணைப்பைக் கொண்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு மேலும் அதிர்ச்சிதரும் வகையில் கட்டண உயர்வு அமைந்து இருக்கிறது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கடும் ஆதங்கத்தில் உள்ளனர்.
சென்னை உள்பட மாநிலம் முழுவதும், பல வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட்ட அறை, வாகன நிறுத்தங்கள், 'லிப்ட்', குடிநீர் மோட்டார் பம்ப், 'ஜிம்' போன்ற பொதுப் பயன்பாட்டுக்காக, தனி மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய மின் கட்டண உயர்வு வரும் வரை, இதுபோன்ற பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு, வீடுகள் போன்றே ஒரே சீரான மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்படி, முதல் 100 யூனிட் இலவசம். 500 யூனிட் வரை மானியக் கட்டணம் என்ற சலுகைகள் கிடைத்தன.
தற்போது இந்த பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு கட்டணச் சலுகை நிறுத்தப்பட்டு, வணிக ரீதியிலான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நிர்ணயித்து இருக்கிறது.
அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புக் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ம், நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு மாதம் ரூ.100-ம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதுவரைப் பொதுப் பயன்பாட்டிற்கு மின் இணைப்பில் எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் இருந்து வந்த நிலை மாறி, தற்போது வீடுகளுக்கான கட்டணத்துடன் கூடுதலாக இதையும் சேர்த்துச் செலுத்த வேண்டிய நிலைக்கு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வந்து இருக்கிறார்கள்.
இதில் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் சாதாரண மின் இணைப்புகளைக் கூட பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளாகக் கருதி, ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாயாகக் கணக்கிட்டு பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடும் எதிர்ப்பு
இதற்கு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு, இதற்கு மாற்று ஏற்பாட்டை அரசு செய்து தரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வசதி படைத்தவர்கள் என்ற மாயை இருக்கிறது. அவர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைப்பது தவறு. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வங்கிக் கடன் பெற்று அதை ஒவ்வொரு மாதமும் கஷ்டப்பட்டு செலுத்திவருபவர்கள் என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.
இந்த கட்டண உயர்வால் அவர்கள் மாதம் மாதம் செலுத்தும் பராமரிப்புச் செலவு கடுமையாக அதிகரித்து அவர்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.
இதுபற்றி அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் காம்ளக்சில் வசிப்பவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் கூறியதாவது:-
சற்று குறைக்கலாம்
சோழிங்கநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த முருகன் கூறுகையில், 'கார் நிறுத்தும் இடங்கள், படிகட்டுகளின் கீழ் உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டு இருக்கும் விளக்குகள் இந்த மின் இணைப்பு மூலம் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஏற்கனவே வீட்டு பிரிவிலான கட்டணத்தின் போது முதல் 100 யூனிட்டுகள் இலவசம் என்பதால், அப்போது எங்களுக்கு இந்த பயன்பாட்டுக்கான கட்டணம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது, ரூ.1,300 கட்டணம் வந்திருக்கிறது. அரசின் செலவினம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. அவர்கள் பக்கமும் நாம் பார்க்க வேண்டும். இருந்தாலும், இந்த அதிரடி கட்டண உயர்வை சற்று குறைக்கலாம் அல்லது மாற்று வழியில் வருவாயை பெருக்கலாம். மக்களுக்கு பாதிக்காத வகையில் அதைச் செய்யலாம்' என்றார்.
கூடுதல் சுமை
திண்டிவனம் ஓடைத்தெருவை சேர்ந்த குப்பம்மாள்:-
நான் குடும்பத்துடன் காம்ளக்சில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். தண்ணீர், மின்மோட்டார் செலவுக்காக மாதந்தோறும் ரூ.50 முதல் ரூ.100 வரை கொடுத்து வந்தோம். தற்போது மின் கட்டணம் உயர்வால் மாதந்தோறும் 200 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. இது எங்களின் குடும்ப செலவில் மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் வாடகை வீடுகளில் ஏழைகளும், நடுத்தர குடும்பத்தினரும்தான் குடியிருப்பார்கள். இந்த மின்கட்டண உயர்வு, என்னைப்போன்ற ஏழைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இந்த மின் கட்டண உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும். மின்வாரியத்துக்கான வருவாயை மாற்று வழியில் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் கட்டணத்தை குறைக்க...
செஞ்சி மணி:-
10 வீடுகள் கொண்ட ஒரே குடியிருப்பில் 10 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அதில் ஒரு வீட்டில் நான், குடும்பத்துடன் பல வருடங்களாக வசித்து வருகிறேன். அப்போதெல்லாம் தண்ணீருக்கென தனி கட்டணம் எதுவும் கிடையாது. கடந்த 4 வருடமாக தண்ணீர் பிடிப்பதற்கும், தண்ணீரை தொட்டியில் ஏற்றுவதற்காக மோட்டாரை இயக்குவதற்காக செலவாகும் மின்சாரத்துக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ.100 வசூலித்தார்கள். தற்போது மின் கட்டண உயர்வால் அதை 150 ரூபாயாக உயர்த்தி கேட்கிறார்கள். வாங்கும் ஊதியத்தில் 50 சதவீதம் வாடகை, மின்கட்டணத்திற்கே செலவாகிறது. மீதமுள்ள ஊதியம் சாப்பிடுவதற்கும், குழந்தைகளை படிக்க வைக்கவும் செலவாகிறது. இப்படியே சென்றால் எப்படி சேமிப்பது. எப்படி வாழ்க்கையில் முன்னேறுவது என்றே தெரியவில்லை. மின் கட்டணத்தை உடனே குறைக்க வேண்டும்.
வாடகையை உயர்த்தலாமா?
விழுப்புரத்தை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் அன்பழகன்:-
எங்கள் குடியிருப்பில் வாடகைக்கு வசிப்பவர்களிடம் மாதந்தோறும் ரூ.3,500 வாடகை வசூலித்து வருகிறேன். இதுதவிர ஒவ்வொரு வீட்டுக்கும் தனியாக மின் கட்டணம் செலுத்தும் வசதி செய்து கொடுத்துள்ளேன். அவர்கள் வீட்டுக்கான மின் கட்டணத்தை நானே செலுத்தி விடுவேன். பின்னர் அவர்கள் கொடுக்கும் சமயத்தில், நான் அந்த பணத்தை வாங்கிக்கொள்வேன். அத்தியாவசிய தேவைக்கு உபயோகப்படுத்தும் தண்ணீருக்கு பொதுவாக ஒரே இணைப்பு உள்ளது. ஆனால் எனது குடியிருப்பில் வசிப்பவர்களிடம் தண்ணீருக்கு என்று தனியாக பணம் வசூலிப்பதில்லை. ஏனெனில் தண்ணீரின் தேவையை அறிந்து பயன்படுத்துவதால் அதிகளவில் தண்ணீர் உபயோகப்படுத்துவதில்லை. இதனால் குறைந்த கட்டணமே வருவதால் தண்ணீருக்கென்று தனியாக கட்டணம் வாங்குவதில்லை. ஒருவர் மட்டும், இந்த மாதம் தாமாக முன்வந்து தண்ணீருக்கென்று தனியாக ரூ.50-ஐ என்னிடம் கொடுத்துள்ளார். தற்போது விலைவாசியும் உயர்ந்துள்ளது, வீட்டு வரியும் உயர்ந்துவிட்ட நிலையில் தற்போது வசூலிக்கும் வீட்டு வாடகை என்பது எனக்கு கட்டுப்படியாகவில்லை. இருந்தாலும் எங்கள் குடியிருப்பில் வசிப்பவர்களின் கஷ்டத்தை உணர்ந்து அவர்களிடம் மனசாட்சியோடு வீட்டு வாடகை வாங்குகிறேன். தண்ணீர் கட்டணம் தனியாக வசூலிப்பது, வீட்டு வாடகையை உயர்த்துவது பற்றி இப்போதைக்கு முடிவு செய்யவில்லை. இனிவரும் காலத்தில் அதுபற்றி யோசிப்பேன்.
வாழ்வாதாரம் பாதிப்பு
கள்ளக்குறிச்சி சக்திவேல்:-
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அபார்ட்மென்டில் குடிநீருக்கு என பொதுவான மின் மோட்டார் அமைத்து அதன் மூலம் வீடுகளுக்கு தண்ணீர் ஏற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் பொதுவான மின்சார இணைப்பிற்காக மாத கட்டணமாக ரூ.50 முதல் ரூ.80 வரை வசூலிக்கப்பட்டது. தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு அதிகப்படியான தொகை வசூல் செய்கின்றனர். இதன் காரணமாக நகர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு அப்பார்ட்மென்டுகளில் இருக்கும் பொதுமக்களும் சிரமமடைகின்றனர்.
சிரமமாக உள்ளது
கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டில் வசிக்கும் மேரி வசந்தி:-
எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன. எங்கள் குடியிருப்பில் தண்ணீர் மோட்டாருக்கு என தனி மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. தற்பொழுது அது வீட்டு சர்வீசீல் இருந்து கடை சர்வீஸ் ஆக மாற்றப்பட்டுள்ளது. வீட்டு இணைப்பாக இருந்தபோது, மின்கட்டணம் ரூ.300 வந்தது. தற்போது வணிக இணைப்பாக மாற்றிய பின்பு ரூ.5 ஆயிரம் வருகிறது. இதை நாங்கள் 6 குடும்பங்களும் பிரித்து கட்டணத்தை செலுத்துகிறோம். இதற்கு முன்பு ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் ரூ.50 மட்டுமே வரும், தற்போது சுமார் ரூ.800 ரூபாய் வரை வருகிறது. இதேபோல் வீட்டின் மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால், மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.