50 ஆண்டுகளாக இருளில் தவித்த மீனவ மக்களுக்கு மின் இணைப்பு வசதி


50 ஆண்டுகளாக இருளில் தவித்த மீனவ மக்களுக்கு மின் இணைப்பு வசதி
x

50 ஆண்டுகளாக இருளில் தவித்த மீனவ மக்களுக்கு மின் இணைப்பு வசதி

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

சேதுபாவாசத்திரம் அருகே இருளில் தவித்த கழுமங்குடா மீனவ மக்களுக்கு கலெக்டர் ஏற்பாட்டின் பேரில் மின் இணைப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டது.

50 ஆண்டுகளாக இருளில் தவிப்பு

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் மரக்காவலசை ஊராட்சியில் கழுமங்குடா ஐஸ்வாடி கிராமத்தில் மீனவர் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 30 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சுமார் 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இவர்களில் சில குடும்பத்தினர் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் காரணமாக மின் இணைப்பு இல்லாததால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் பிள்ளைகள் படிக்க முடியாமலும், டி.வி. பார்க்க முடியாமலும், செல்போனுக்கு சார்ஜ் கூட ஏற்ற முடியாமலும் தவித்து வந்தனர்.

கலெக்டர் நேரடி ஆய்வு

இந்த பகுதி மக்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி'யில் விரிவான செய்தி வெளியானது.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கழுமங்குடா கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் இந்த பகுதிக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்.

பணிகள் தீவிரம்

கலெக்டர் உத்தரவின்பேரில் கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் மின்இணைப்பு வழங்குவதற்கு தேவையான மின்கம்பங்கள் நட்டு, மின் இணைப்பு வழங்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. அதேபோல் மீனவர் வீடுகளிலும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தும் வகையில், மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடந்து வந்தது.

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம்(புதன்கிழமை) கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கழுமங்குடா கிராமத்திற்கு வந்தார்.

குழந்தைகள் மகிழ்ச்சி

அங்கு வந்த கலெக்டர், ஒவ்வொரு வீடாகச் சென்று பொத்தானை இயக்கி வைத்து அங்குள்ள 12 வீடுகளுக்கு மின்சார வசதியை வழங்கினார். தங்கள் வீடுகளில் மின் விளக்குகள் எரிய தொடங்கியதும், அந்த வீடுகளில் இருந்த குழந்தைகள் உற்சாகத்தில் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், பேராவூரணி தாசில்தார் சுகுமார், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.


Next Story