நாமக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் திட்ட தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, நாமக்கல் மின்திட்ட செயலாளர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் கண்ணன், கரூர் மண்டல செயலாளர் தனபாலன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். அதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிரந்தரபணி வழங்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதனிடையே மாவட்ட நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கையை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று மின்வாரியத்தில் நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு நிரந்தர பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.