போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மின்வாரிய ஊழியரின் உடல் மீட்பு
போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மின்வாரிய ஊழியரின் உடல் மீட்கப்பட்டது.
போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மின்வாரிய ஊழியரின் உடல் மீட்கப்பட்டது.
காட்டாற்று வெள்ளம்
போடி அருகே உள்ள ஊத்தாம்பாறை ஆற்றில் நேற்று முன்தினம் மதியம் மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 14 பேர் குளிப்பதற்காக சென்றனர். அங்கு அவர்கள் குளித்து கொண்டிருந்தபோது ஆற்றில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் 10 பேர் கரையேறிவிட்டனர். 4 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போடி தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் கயிறு கட்டி உடனடியாக மீட்கப்பட்டனர். ஆனால் சுரேஷ்குமார் (வயது 27) என்ற மின்வாரிய ஊழியர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு 7 மணி வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை.
உடல் மீட்பு
இதற்கிடையே சுரேஷ்குமாரை தேடும் பணி நேற்று காலை மீண்டும் தொடங்கியது. அப்போது மின்வாரிய ஊழியர்கள் குளித்த இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் சுரேஷ்குமார் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் கிடந்த இடம் மிகவும் ஆழமாக இருந்ததாக தீயணைப்பு படைவீரர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சுரேஷ்குமாரின் உடலை போடி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.