ஊட்டி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
ஊட்டி அருகே தெருவிளக்கு மாற்றும்போது தற்காலிக மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊட்டி
ஊட்டி அருகே தெருவிளக்கு மாற்றும்போது தற்காலிக மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்காலிக ஊழியர்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோலூர் கக்குச்சியை சேர்ந்தவர் கண்ணதாசன். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களுக்கு சதீஷ் (வயது 29), கவின் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
சதீஷ் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கல்லுண்டி கிராமத்தில் தெருவிளக்கு மாற்றுவதற்காக சதீஷ் விளக்கு இணைப்புகளுடன் அங்கு சென்றார்.
அப்போது குறைந்த அழுத்த மின் இணைப்பை அணைத்து விட்டு மின்கம்பத்தில் ஏறினார். தெருவிளக்கு இணைப்புகள் அருகில் இருந்த உயர் அழுத்த கம்பியில் பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
பரிதாப சாவு
இதில் தூக்கி வீசப்பட்டு சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மின் இணைப்பை முழுவதுமாக துண்டித்தனர்.
இதன் பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து புதுமந்து இன்ஸ்பெக்டர் அல்லிராணி, சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.