மின்துறை ஊழியர்கள் போராட்டம்
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மின்துறை ஊழியர்கள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
மின்வாரியத்தில் தொழிற்சங்கங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி, தற்போது வரை பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும். காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் அடையாளம் கண்ட, ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும்.
தானே, வர்தா, ஒகி, நீலம் மற்றும் கஜா புயலின் போது இரவு, பகலாக வேலைபார்த்த ஒப்பந்த ஊழியர்களை கள உதவியாளர்களாக நியமிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்வோம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (சி.ஐ.டி.யு.) அறிவித்து இருந்தனர்.
போராட்டம்
அதன்படி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் ஆறுமுகம், ராஜகோபால், தனுசு, தனசேகரன், வடிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் தேசிங்கு, மாவட்ட சிறப்பு தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர்.
கலெக்டரிடம் மனு
இதை பார்த்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி முக்கிய நிர்வாகிகள் மட்டும் செல்லுமாறு கூறினர். இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் மட்டும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களுடன் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜை சந்தித்து மனுவை வழங்கினர்.
இதை பெற்ற அவர், இது பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.