மின்னொளி கபடி போட்டி
தூத்துக்குடி அருகே மின்னொளி கபடி போட்டி நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள மேல தட்டப்பாறை கிராம மக்கள் மற்றும் எம்.எஸ்.சி நண்பர்கள் கபடி குழு இணைந்து மின்னொளி கபடி போட்டியை நடத்தினர். இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 60 கபடி அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகளை மேலத்தட்டப்பாறை பஞ்சாயத்து தலைவர் மகேசுவரி முத்துமாரியப்பன் தொடங்கி வைத்தார். போட்டியில் கே, டி.வி.அணி முதல் பரிசையும், எம்.எஸ்.சி. நண்பர்கள் அணி 2-வது பரிசையும் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி செயலாளர் லிங்கராஜ் தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை பரிசு வழங்கினார். விழாவில் எழுத்தாளர் கனிராஜ் மள்ளர், உமரி செல்வா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா. ஜனதா கட்சி தெற்கு ஒன்றிய முன்னாள் இளைஞரணி தலைவர் ராஜசேகர், ஓட்டப்பிடாரம் பா.ஜனதா துணை தலைவர் வசந்தகுமார், செயலாளர்கள் சிவக்குமார், பிரதிஸ் மற்றும் முத்துமாரியப்பன், கோட்டமுத்து, ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.