டிரான்ஸ்பார்மரில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் வீடுகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் வெடித்து சிதறின ஓமலூர் அருகே பரபரப்பு

டிரான்ஸ்பார்மரில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் வெடித்து சிதறின. இதனால் ஓமலூர் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்,
எலக்ட்ரானிக் பொருட்கள்
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் பல்வேறு வீடுகளில் பொதுமக்கள் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் திடீரென டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், விளக்குகள் உள்ளிட்டவை வெடித்து சிதறின.
இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது மின்சாரமும் தடை பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்தனர்.
மின்கம்பி அறுந்து விழுந்தது
நேற்று காலை பார்த்த போது கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உயர் மின்னழுத்த கம்பி அறுந்து டிரான்ஸ்பார்மரில் விழுந்ததால் வீட்டில் இருந்த எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம் அடைந்தது தெரிய வந்தது. இதுபற்றி சின்ன திருப்பதி மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் நேற்று காலை வீடுகளுக்கு மட்டும் தற்காலிகமாக மின் இணைப்பு கொடுத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பரபரப்பாக காணப்பட்டது.






