தமிழக கர்நாடக எல்லையில் தேசிய நெடுஞ்சாலையை வழிமறித்த யானை கூட்டம்; போக்குவரத்து பாதிப்பு
தமிழக கர்நாடக எல்லையில் தேசிய நெடுஞ்சாலையை வழிமறித்த யானை கூட்டம்; போக்குவரத்து பாதிப்பு
தாளவாடி
தாளவாடி அருகே ஆசனூரை அடுத்த காராப்பள்ளத்தில் இருந்து புளிஞ்சூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தமிழகம்- கர்நாடக எல்லையையொட்டி உள்ள வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் யானை கூட்டம் வெளியேறியது. பின்னர் அந்த யானை கூட்டம் சாலையில் லாரி டிரைவர்கள் வீசி சென்ற கரும்புகளை சுவைத்தபடி நின்றன. நடுரோட்டில் யானைகள் கூட்டமாக நின்றதால் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை சிறிது தூரத்திலேயே நிறுத்தினர். இதனால் ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்கள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இந்த காட்சிகளை வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போனில் படம் பிடித்தனர். சுமார் 30 நிமிட நேரத்துக்கு பின்னர் யானை கூட்டம் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன. 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். கரும்பு ஏற்றி செல்லும் லாரிகளின் டிரைவர்கள், கரும்புகளை சாலையில் வீசி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால் அந்த எச்சரிக்கையும் மீறி டிரைவர்கள் லாரியில் இருந்து கரும்பை சாலையில் வீசி செல்வது தொடர்கதையாகி வருகிறது எனவே கரும்புகளை வீசி செல்லும் லாரி டிரைவர்கள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வழியாக செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.