தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து 2 யானைகள் அட்டகாசம்-வாழைகள், கரும்பு சேதம்


தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த 2 யானைகள் வாழைகள், கரும்புகளை சேதப்படுத்தின.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த 2 யானைகள் வாழைகள், கரும்புகளை சேதப்படுத்தின.

யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தன் (வயது 36). விவசாயி. இவருக்கு வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. இங்கு அவர் தனது 4 ஏக்கர் பரப்பளவிலான தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

தோட்டத்துக்குள் புகுந்தன

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள் அனுமந்தனின் வாைழ தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகளில் குருத்துக்களை தின்றும், மரங்களை மிதித்தும் நாசப்படுத்தி கொண்டிருந்தன.

சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த அனுமந்தன் திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் அவர் தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு யானைகள் நின்றுக்கொண்டு் வாழைகளை சேதப்படுத்தி கொண்டிருந்தன. அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுபற்றி அக்கம்பக்கத்து விவசாயிகளிடம் கூறினார்.

வாழைகள் நாசம்

அதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் அங்கு திரண்டார்கள். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லாமல் போக்கு காட்டியது. தோட்டத்துக்குள் அங்கும் இங்கும் ஓடியபடி வாழைகளை நாசப்படுத்தின.

மேலும் அருகே உள்ள வெங்கடாசலம் என்பவரது கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் அங்கு பயிர் செய்யப்பட்டிருக்கும் கரும்புகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின.

கரும்பு சேதம்

அதன்பின்னர் நேற்று காலையில் 2 யானைகளும் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றன. யானைகளால் சுமார் 400 வாழைகளும், ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிரும் நாசம் அடைந்தது.

கும்கி யானைகள் வந்த நிலையில் காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து வாழைகளை, கரும்புகளை நாசம் செய்த சம்பவம் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சேதமடைந்த வாழை, கரும்பு பயிருக்கு வனத்துறையினர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story