ஆசனூர் அருகே சாலையில் கிடந்த கரும்புகளை ருசித்த யானைகள்- போக்குவரத்து பாதிப்பு


ஆசனூர் அருகே சாலையில் கிடந்த கரும்புகளை ருசித்த யானைகள்- போக்குவரத்து பாதிப்பு
x

ஆசனூர் அருகே சாலையில் கிடந்த கரும்புகளை ருசிக்க யானைகள் நின்றுகொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு

தாளவாடி

ஆசனூர் அருகே சாலையில் கிடந்த கரும்புகளை ருசிக்க யானைகள் நின்றுகொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரும்பை ருசிகண்ட யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது யானைகள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும். அதுபோன்ற நேரங்களில் அந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றிச்செல்லும் லாரி டிரைவர்கள் யானைகளுக்கு கரும்பு கட்டுகளை தூக்கி போட்டு பழகிவிட்டார்கள்.

இதனால் ருசிகண்ட யானைகள் கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் வருகின்றனவா? என்று நாள்தோறும் நெடுஞ்சாலை ஓரம் உலாவ தொடங்கிவிட்டன. இதனால் அடிக்கடி போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

தடுப்பு கம்பிகள்

இந்தநிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு நேற்று லாரிகள் சென்றன. தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள காரப்பள்ளத்தில் வன சோதனை சாவடி உள்ளது. இங்கு அதிக உயரத்தில் பாரம் ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வருவதை தடுக்க ரோட்டின் குறுக்கே குறிப்பிட்ட உயரத்தில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்ததும் தடுப்புகளை கடந்து செல்ல லாரி டிரைவர்கள் உயரத்தில் இருந்த சில கரும்பு கட்டுகளை எடுத்து ரோட்டில் வீசிவிட்டு சென்றுவிட்டார்கள்.

பயணிகள் அவதி

சிறிது நேரத்தில் அந்த வழியாக ரோட்டை கடக்க வந்த 4 யானைகள், ரோட்டில் கரும்புகள் கிடப்பதை பார்த்து ருசிக்க தொடங்கிவிட்டன. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் கடந்து செல்ல முடியாமல் அப்படியே நின்றுகொண்டார்கள்.

போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அறிந்த வனத்துறை ஊழியர்கள் யானைகளை விரட்ட முயன்றார்கள். ஆனால் யானைகள் கரும்பை முழுவதுமாக சுவைத்த பின்னரே காட்டுக்குள் சென்றன. அதுவரை எந்த போக்குவரத்தும் நடைபெறவில்லை. பயணிகள் அவதிப்பட்டார்கள்.



Next Story