ஆசனூர் அருகே காரப்பள்ளம் சோதனை சாவடியில் முகாமிட்ட யானைகள்; போக்குவரத்து பாதிப்பு
ஆசனூர் அருகே உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியை யானைகள் முகாமிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
ஆசனூர் அருகே உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியை யானைகள் முகாமிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
10 வனச்சரகங்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவு தேடி சாலையை யானைகள் கடந்து செல்வது வழக்கம்.
தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரிகள் தினந்தோறும் சென்று வருகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் லாரிகளில் அதிக உயரத்திற்கு கரும்பு பாரம் ஏற்றி செல்லப்படுகிறது. இதனால் ஆசனூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வன சோதனை சாவடியில் அமைக்கப்பட்டு உள்ள உயர தடுப்பு கம்பியில் லாரியின் மேல் பகுதியில் ஏற்றப்பட்டுள்ள கரும்பு பாரம் உரசுகின்றன. இதன்காரணமாக லாரியில் இருந்து கரும்பு துண்டுகள் கீழே சிதறி விழுந்து சாலையில் கொட்டி கிடக்கின்றன.
சாலையில் முகாமிட்ட யானைகள்
இந்த கரும்புகளை தின்பதற்காக யானைகன் காரப்பள்ளம் சோதனை சாவடி பகுதியில் உலா வருவதும், அந்த வழியாக வரும் லாரிகளை மறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை காரப்பள்ளம் சோதனை சாவடிக்கு 2 காட்டு யானைகள் வந்தன. பின்னர் அந்த யானைகள் சோதனை சாவடி பகுதியில் உள்ள சாைலயில் முகாமிட்டன. இதையடுத்து சாலையில் சிதறி கிடந்த கரும்புகளை துதிக்கையால் எடுத்து தின்றபடி வாகனங்களை வழிமறித்தன. இதை கண்டதும் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். இதன்காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 15 நிமிடத்துக்கும் மேலாக சாலையில் முகாமிட்ட யானைகள், பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது.