கடம்பூர் அருகே பரிதாபம்: மோட்டார்சைக்கிளில் வந்த விவசாயியை யானை மிதித்து கொன்றது- உடன் வந்தவர் உயிர் தப்பினார்
கடம்பூர் அருகே மோட்டார்சைக்கிளில் வந்த விவசாயியை யானை மிதித்து கொன்றது. உடன் வந்தவர் உயிர் தப்பினார்.
டி.என்.பாளையம்
கடம்பூர் அருகே மோட்டார்சைக்கிளில் வந்த விவசாயியை யானை மிதித்து கொன்றது. உடன் வந்தவர் உயிர் தப்பினார்.
விவசாயி
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள கரளயம் ஏலஞ்சிபுதூர்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 52). விவசாயி. அறுவடை எந்திரங்களை வாடகைக்கு விடும் தொழிலும் செய்து வந்தார். இவருடைய மனைவி வசந்தி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பழனிச்சாமி கடம்பூர் வனச்சரகத்திற்கு உள்பட்ட குன்றி பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்தில் மக்காச்சோள அறுவடை பணிக்கு எந்திரத்துடன் சென்றார். வேலை முடிந்ததும் பழனிச்சாமியும், அறுவடை எந்திரத்தின் டிரைவர் எக்கத்தூர் போலேகவுடனூரை சேர்ந்த நாகேஷ் என்பவரும் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்கள்.
சாவு
மோட்டார்சைக்கிளை நாகேஷ் ஓட்டினார். பழனிச்சாமி பின்னால் உட்கார்ந்து வந்தார். அஞ்சனை பிரிவு என்ற இடம் அருகே சென்றபோது திடீரென புதருக்குள் இருந்து ஒரு காட்டு யானை வௌியே வந்தது.
உடனே பயத்தில் இருவரும் அலறினார்கள். அப்போது நாகேஷ் மோட்டார்சைக்கிளை அப்படியே நிறுத்திவிட்டு, இறங்கி ஓடி அருகே உள்ள புதருக்குள் ஒளிந்து கொண்டார்.
பழனிச்சாமியும் வண்டியில் இருந்து இறங்கி குன்றி செல்லும் சாலையில் உயிர் தப்பிக்க ஓடினார். அப்போது திடீரென புதருக்குள் இருந்து வெளியே வந்த மற்றொரு யானை பழனிச்சாமியை துரத்தியது. சில நொடிகளுக்குள் அவரை துதிக்கையால் பிடித்து தூக்கி கீழே போட்டு காலால் மிதித்தது. இதில் உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் பழனிச்சாமி அதே இடத்தில் இறந்தார்.
உடல் மீட்பு
சிறிது நேரத்தில் 2 யானைகளும் காட்டுக்குள் சென்றுவிட்டன. அதுவரை புதருக்குள் ஒளிந்திருந்த நாகேஷ் பின்னர் வெளியே வந்து பார்த்தார். அப்போது நண்பர் உடல் நசுங்கி இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். பின்னர் ஊருக்குள் சென்று நாகேஷின் உறவினர்களிடம் நடந்ததை கூறினார்.
இதுபற்றி தகவல் அறிந்து கடம்பூர் வனச்சரகர் இந்துமதி தலைமையில் வனத்துறையினரும், கடம்பூர் போலீசாரும் இரவோடு இரவாக பழனிச்சாமி பலியாகி கிடந்த இடத்துக்கு சென்றார்கள். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார்கள்.
உறவினர்கள் கதறல்
இதுகுறித்து கடம்பூர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யானை தாக்கி பலியான பழனிச்சாமியின் குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் நிவாரண நிதி பெற்றுத்தரப்படும் என்று வனச்சரகர் இந்துமதி தெரிவித்துள்ளார்.
கடம்பூரில் இருந்து குன்றி செல்லும் ரோடு அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதால் பகலிலேயே யானைகள் நடமாடுகின்றன. அதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உடல் நசுங்கி பலியாகி கிடந்த பழனிச்சாமியின் உடலை பார்த்து. அவருடைய உறவினர்கள் கதறி துடித்தது காண்பவர்களையும் கண்கலங்க செய்தது.