சாலையை வழிமறித்து நின்ற காட்டுயானை
தேன்கனிக்கோட்டை அருகே சாலையை வழிமறித்து காட்டுயானை நின்றதால் பொதுமக்கள் கிராமத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே சாலையை வழிமறித்து காட்டுயானை நின்றதால் பொதுமக்கள் கிராமத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
யானைகள்
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இடம்பெயர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, ஜவளகிரி, நொகனூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் பல்வேறு குழுவாக பிரிந்து சுற்றித்திரிக்கின்றன. இந்த யானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு யானை வனப்பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்களில் சுற்றித்திரிந்து கிராமமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த யானை நேற்று காலை ஏணி முச்சந்திரம் கிராமத்திற்கு செல்லும் சாலையை வழிமறித்து நின்றது.
கிராமமக்கள் நிம்மதி
இதனால் பொதுமக்கள் கிராமத்தில் இருந்து வெளியே வரவும், உள்ளே செல்லவும் முடியாமல் தவித்தனர். அந்த யானை நீண்ட நேரம் அதே பகுதியில் சுற்றித்திரிந்ததால் அச்சம் அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்து காட்டுயானையை வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.
இதனால் கிராமமக்கள் நிம்மதி அடைந்தனர். காட்டுயானை சுற்றித்திரிவதால் ஏணி முச்சந்திரம், நொகனூர், மரக்கட்டா ஆகிய கிராமமக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.