2 மயக்க ஊசிகள் போட்டும் காட்டுக்குள் ஓடி மறைந்த கருப்பன் யானை மீண்டும் களம் இறங்கியது- ஒரு ஏக்கர் பயிர்கள் நாசம்; விவசாயிகள் அச்சம்
தாளவாடி அருகே 2 மயக்க ஊசிகள் போட்டும் காட்டுக்குள் ஓடி மறைந்த கருப்பன் யானை மீண்டும் களம் இறங்கி, ஒரு ஏக்கர் பயிர்களை நாசம் செய்தது. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளார்கள்.
தாளவாடி
தாளவாடி அருகே 2 மயக்க ஊசிகள் போட்டும் காட்டுக்குள் ஓடி மறைந்த கருப்பன் யானை மீண்டும் களம் இறங்கி, ஒரு ஏக்கர் பயிர்களை நாசம் செய்தது. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளார்கள்.
கருப்பன் யானை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் வனத்தை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவிட்டது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் வசித்த கருப்பன் என்ற ஒற்றை யானை காட்டை விட்டு வெளியேறி விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து நாள்தோறும் பயிர்களை நாசம் செய்தது.
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகளுடன் சேர்ந்து வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றார்கள். ஆனால் கருப்பன் யானை விரட்ட வருபவர்களை துரத்தியது. மேலும் தோட்டத்தில் காவலுக்கு இருந்த தர்மபுரம் பகுதியை சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயியையும், திகினாரை ஜோரைகாடு பகுதியை சேர்ந்த மாதேவா என்ற விவசாயியையும் மிதித்து கொன்றது.
இதனால் கருப்பன் யானையை நினைத்து அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் அச்சம் அடைந்தார்கள்.
மேலும் கருப்பன் யானையை மயக்க ஊசிபோட்டு பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரின் வாகனங்களை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டமும் நடத்தினார்கள்.
மயக்க ஊசி போடப்பட்டது
இதையடுத்து கருப்பன் யானையை கும்கி யானைகளின் உதவியுடன் நெருங்கி மயக்க ஊசிபோட வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மேலும் பொள்ளாச்சி டாப் சிலிப் பகுதியில் இருந்து 3 கும்கி யானைகள் கருப்பன் யானை அதிகம் நடமாடும் ஜோரைகாடு பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது தோட்டத்தை நோக்கி வந்த கருப்பன் யானையை கும்கி யானைகள் நெருங்கின. உடனே மருத்துவ குழுவினர் 2 முறை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் கருப்பன் மயக்கம் அடையாமல் காட்டுக்குள் ஓடிவிட்டது.
காட்டுக்குள் மாயம்
அதன்பின்னர் ஒரு வாரம் கருப்பன் யானை காட்டை விட்டு வெளியே வரவில்லை. கண்காணிப்பு பணியில் இருந்த வனத்துறையினர் கருப்பன் யானை பயந்து அடர்ந்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இனி வராது என்று நினைத்து வன அலுவலகத்துக்கு திரும்பினார்கள்.
கும்கி யானைகளும் பொள்ளாச்சி டாப்சிலிப்புக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்டன. அப்போது விவசாயிகள் அந்த லாரியை மறித்து கருப்பன் யானையை பிடிக்கும் வரை கும்கி யானைகளை அழைத்து செல்லக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது வனத்துறையினர் இனி கருப்பன் யானை வெளியே வராது என்று சமாதானப்படுத்தினார்கள். அதேபோல் கருப்பன் யானையும் காட்டுக்குள் மாயமானது. 2 மயக்க ஊசிகள் போட்டுள்ளதால் அதற்கு என்ன ஆனது? என்ற கேள்வியும் எழுந்தது.
மீண்டும் களம் இறங்கியது
இதற்கிடையே சுமார் 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் களத்தில் இறங்கியது கருப்பன் யானை. ஜோரைக்காடு பகுதியை சேர்ந்த தாமோதரன் என்ற விவசாயிக்கு அந்த பகுதியில் கரும்பு தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு காட்டை விட்டு வெளியேறிய கருப்பன் யானை தாமோதரனின் கரும்பு தோட்டத்துக்குள் நுழைந்து கரும்புகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது.
ேமலும் அருகே உள்ள தோட்டத்துக்குள் புகுந்து முட்டைக்கோஸ், பீட்ரூட் பயிர்களை சுமார் 1 ஏக்கர் அளவில் நாசம் செய்தது. சத்தம் கேட்டு வந்த விவசாயிகள் கருப்பனை விரட்ட பயந்தனர் உடனே ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்களுடன் சேர்ந்து கருப்பனை விரட்ட முயன்றார்கள். ஆனால் கருப்பன் எதற்கும் அஞ்சாமல் பயிர்களை நாசம் செய்துவிட்டு, நேற்று அதிகாலை தானாக வனப்பகுதிக்குள் சென்றது.
கோரிக்கை
இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, 'மயக்க ஊசிக்கு மயங்காமல் கருப்பன் காட்டுக்குள் ஓடியபோது அது திரும்ப வராது என்று வனத்துறையினர் கூறினார்கள். கும்கி யானைகளையும் அனுப்பிவிட்டார்கள். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எங்களை சமாதானப்படுத்திவிட்டு சென்றுவிட்டார்கள். இப்போது கருப்பன் மீண்டும் களம் இறங்கிவிட்டது. அதை உடனே கட்டுப்படுத்த வேண்டும். இல்லை என்றால் பயிர்களை நாசம் செய்வதோடு, தோட்டத்தில் இருப்பர்களையும் மிதித்து கொன்றுவிடும் எனவே வனத்துறையினர் கும்கி யானைகளை மீண்டும் அழைத்து வந்து, முறையாக மயக்க ஊசி செலுத்தி கருப்பன் யானையை பிடிக்க வேண்டும். அதேபோல் சேதமான பயர்களுக்கும் இழப்பீடு வழங்கவேண்டும்' என்றார்கள்.
கும்கி படத்தில் கொம்பன் என்ற அடங்காத ஒற்றை யானை காட்டை விட்டு வெளியேறி பயிர்களை நாசம் செய்யும், மனிதர்களையும் கொல்லும் அதேபோல் கருப்பன் யானையும் வனத்தை ஒட்டியுள்ள கிராமமக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. கருப்பனை பிடித்து பொதுமக்களின் அச்சத்தை போக்குவது வனத்துறையினரின் கடமை என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.