தாளவாடி அருகே தோட்டங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்; 40 தென்னை மரங்கள் சேதம்
தாளவாடி அருகே தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானைகள் 40 தென்னை மரங்களை சேதப்படுத்தின.
தாளவாடி
தாளவாடி அருகே தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானைகள் 40 தென்னை மரங்களை சேதப்படுத்தின.
தென்னை மரங்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் தேவா (வயது 35). விவசாயி. இவரது வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. இங்குள்ள 3 ஏக்கர் பரப்பளவில் அவர் தென்னை மரங்கள் சாகுபடி செய்துள்ளார்.
சேதம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறின. பின்னர் இவை தேவாவின் தோட்டத்துக்குள் புகுந்தன. அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னங்குருத்துக்களை தின்றும், தென்னை மரங்களை காலால் மிதித்தும் நாசப்படுத்தின.
சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த தேவா திடுக்கிட்டு் எழுந்தார். பின்னர் தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அங்கு யானைகள் நின்று கொண்டு் தென்னை மரங்களை சேதப்படுத்திக்கொண்டிருந்தன. அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுபற்றி அக்கம்பக்கத்து விவசாயிகளிடம் கூறினார்.
40 தென்னை மரங்கள்
அதைத்தொடர்ந்து அனைவரும் அங்கு ஒன்று திரண்டு யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது யானைகள் அங்கிருந்து அருகே உள்ள முத்துசாமி என்பவரது தென்னந்தோப்புக்குள் புகுந்தன. பின்னர் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த தென்னை மரங்களை யானைகள் சேதப்படுத்தின. அதன்பின்னர் அங்கும் இங்கும் சுற்றி திரிந்த யானைகள், நேற்று அதிகாலை 3 மணி அளவில் காட்டுக்குள் சென்றன.
யானைகளால் தேவாவின் தோட்டத்தில் சுமார் 18 தென்னை மரங்களும், அதேபோல் முத்துசாமியின் தோட்டத்தில் 22-ம் என மொத்தம் 40 தென்னை மரங்கள் சேதமானது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும், சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.