3 காட்டு யானைகள் முகாம்


3 காட்டு யானைகள் முகாம்
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி நகருக்கு அருகில் சுங்கச்சாவடி பகுதியில் 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகருக்கு அருகில் சுங்கச்சாவடி பகுதியில் 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

3 யானைகள் அட்டகாசம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி அருகே பனகமுட்லுவை ஒட்டிய வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டிருந்தன. அவை பிக்கனப்பள்ளி, மேலுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. கடந்த 3 நாட்களுக்கு முன்பு குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் 3 யானைகளும் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகினர்.

வனத்துறையினர் யானையை சானமாவு வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லவில்லை. நேற்று முன்தினம் இரவு இந்த 3 யானைகளும் இடம் பெயர்ந்து கிருஷ்ணகிரி அருகில் உள்ள பையனப்பள்ளி அடுத்த ஜாகிர்மோட்டூர் பகுதிக்கு வந்தன. மேலும் அங்கிருந்த நெல் பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்தன.

சுங்கச்சாவடி அருகே வந்தன

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜாகிர்மோட்டூரில் இருந்து இடம் பெயர்ந்து குல்நகர் வழியாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் முகாமிட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 3 யானைகளும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 3 யானைகளை சுற்றிலும் பொதுமக்கள் இடையூறாக உள்ளனர். மேலும் ஒரு பக்கம் ஆறு உள்ளதாலும், மறு பக்கம் தேசிய நெடுஞ்சாலை உள்ளதாலும் எந்த பக்கமும் செல்லாமல் யானை அலைந்து கொண்டுள்ளது. இரவில் யானைகளை விரட்ட தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் யாரும் சுங்கச்சாவடி அருகில் இரவு நேரத்தில் செல்ல வேண்டாம் என்று கூறினார்கள்.


Next Story