மின் வேலியில் சிக்கி குட்டி யானை சாவு
ராயக்கோட்டை அருகே மின் வேலியில் சிக்கி இறந்த குட்டி யானையின் உடலை குழி தோண்டி புதைத்த விவசாயிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே மின் வேலியில் சிக்கி இறந்த குட்டி யானையின் உடலை குழி தோண்டி புதைத்த விவசாயிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காப்புக்காடு உள்ளது. இந்த வனப்பகுதியில் யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதி அருகில் கடூர் கிராமத்தையொட்டி அக்குபாய் கொட்டாய் உள்ளது. இந்த ஊரை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 63). விவசாயி.
இவர் தனது நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தார். அந்த நிலத்திற்கு அடிக்கடி காட்டுபன்றிகள் வந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் அந்த நிலத்தை சுற்றிலும் அவர் மின் வேலி அமைத்து இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த நிலத்திற்கு யானைகள் கூட்டம் வந்துள்ளது. அப்போது குட்டி யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது.
மின்வேலியில் சிக்கி பலி
இந்த நிலையில் யானை குட்டி இறந்ததை எல்லப்பன் பார்த்து அருகில் உள்ள நிலத்தில் குழி தோண்டி குட்டி யானையை புதைத்தார். யானை குட்டி மின் வேலியில் சிக்கி இறந்து புதைக்கப்பட்ட தகவல் கிராம மக்களுக்கு தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ராயக்கோட்டை வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி மற்றும் வனத்துறையினர் நேற்று காலை அங்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் எல்லப்பன் மற்றும் கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது குட்டி யானை மின் வேலியில் சிக்கி இறந்ததும், அதை அருகில் புதைத்து இருப்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் அனைத்தும் ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள பட்டா நிலத்தில் நடந்துள்ளது. இது குறித்து வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்திகேயனிக்கு தகவல் தெரிவித்தார்.
இன்று தோண்டி எடுக்கப்படுகிறது
இதையடுத்து அவருடைய தலைமையில் ஓசூர் கோட்ட உதவி வன பாதுகாவலர் ராஜ மாரியப்பன், ஓசூர் வனச்சரக அலுவலர் ரவி மற்றும் குழுவினரும், நாகமங்கலம் ஊராட்சி தலைவர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேற்று விரைந்து சென்றனர். அதே போல மின்வாரிய ஊழியர்களும், வருவாய்த்துறையினரும் அங்கு சென்றனர்.
இந்த நிலையில் இரவு ஆகி விட்டதால் யானையை தோண்டி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவையில் இருந்து வனத்துறை சிறப்பு கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செயயப்பட உள்ளதாக ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தெரிவித்தார்.
விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக ராயக்கோட்டை வனச்சரக அலுவலர் வழக்குப்பதிவு செய்து எல்லப்பனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். ராயக்கோட்டை அருகே மின்வேலியில் சிக்கி இறந்த குட்டி யானையை, விவசாயி குழியை தோண்டி புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.