மின்வேலியில் சிக்கி யானை சாவு
சிவகிரியில் வயலை சுற்றி அமைத்த மின்வேலியில் சிக்கி யானை பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.
சிவகிரி:
சிவகிரியில் வயலை சுற்றி அமைத்த மின்வேலியில் சிக்கி யானை பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.
வயல் பகுதி
தென்காசி மாவட்டம் சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள கருங்குளம் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 70). விவசாயியான இவருக்கு சிவகிரி மேற்கே பெரிய ஆவுடைபேரி கண்மாய் பகுதியில் வயல் உள்ளது. இதில் நெல், கரும்பு போன்ற பயிர்களை பயிரிட்டு உள்ளார்.
மேலும் இந்த வயல் பகுதியானது மேற்கு ெதாடர்ச்சி மலையடிவாரத்தில் இருப்பதால் அடிக்கடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
யானை சாவு
இந்த நிலையில் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக நேற்று முன்தினம் இரவில் கருப்பையா தனது வயல் பகுதியை சுற்றி மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து ஒரு யானை கருப்பையாவின் வயல் பகுதிக்கு வந்தது. அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் யானை சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த யானை துடிதுடித்து பரிதாபமாக இறந்தது.
குழி தோண்டி புதைப்பு
அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சிவகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனச்சரகர் மவுனிகா தலைமையில் கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ், வனவர் அஜித்குமார், வனக்காப்பாளர் பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, மின்வேலியில் சிக்கி பலியான யானை 10 வயது நிரம்பிய ஆண் யானை என்பது தெரியவந்தது.
மேலும் கால்நடை டாக்டர் மனோகரன் வரவழைக்கப்பட்டார். அவர், மாவட்ட வன அலுவலர் முருகன், உதவி வனச்சரக அலுவலர் ஷாநவாஸ்கான் ஆகியோர் முன்னிலையில் யானையை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் யானையை அங்கேயே குழி தோண்டி புதைத்தனர்.
விவசாயி கைது
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி, மின்வேலி அமைத்ததாக கருப்பையாவை கைது செய்து, சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.