இளைஞர்களை துரத்திய காட்டுயானை
இளைஞர்களை துரத்திய காட்டுயானை
தளி,
உடுமலை-மூணாறு சாலையில் சென்ற யானையை இளைஞர்கள் படம்பிடிக்க முயன்றபோது அவர்களை யானை துரத்தியது. இதில் அவர்கள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.
யானை
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.
இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, மலைப்பாம்பு, சிங்கவால்குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதுதவிர அரிய வகை உயிரினங்களும் மூலிகைகள், தாவரங்கள் வனப்பகுதியில் வளர்ந்து வருகிறது.
வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிடத்தை மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகள் பூர்த்தி செய்து தருகிறது.
வனப்பகுதியில் வசிக்கும் வன விலங்குகள் தாகம் தீர்ப்பதற்காக அமராவதி அணையை நோக்கி வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் உடுமலை மூணாறு சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் இருவர் சாலையை கடக்க முயன்ற யானையை படம் பிடிக்க முயன்றர். இதனால் ஆத்திரமடைந்த யானை அவர்களை விரட்டியது.
உயிர்தப்பினர்
அப்போது அதிஷ்டவசமாக யானையிடம் இருந்து இளைஞர்கள் உயிர் தப்பினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
உடுமலை-மூணாறு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையைக் கடக்கும் வரையில் பொறுமை காத்து செல்ல வேண்டும்.
வனவிலங்குகளை துன்புறுத்துவது அவை மிரட்சி அடையும் வகையில் கற்களை வீசி தாக்ககுவது ஒலி எழுப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. வனவிலங்குகளிடம் அத்துமீரும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.