வைத்தியநாத சுவாமி கோவிலில் யானை ஓட்டம்
பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு வைத்தியநாத சுவாமி கோவிலில் யானை ஓட்டம் நடந்தது.
சீர்காழி:
பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு வைத்தியநாத சுவாமி கோவிலில் யானை ஓட்டம் நடந்தது.
வைத்தீஸ்வரன் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தையல்நாயகி உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது.
இக்கோவில் நவக்கிரகங்களில் முதன்மையான செவ்வாய் தலமாகும். இந்த கோவிலில், முருக பெருமான் செல்வமுத்துக்குமார சுவாமியாகவும், சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரியும் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கின்றனர்.
பங்குனி பிரம்மோற்சவ திருவிழா
இக்கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்்சவ திருவிழா கடந்த 27-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் போது வைத்தியநாத சுவாமியும், தையல்நாயகி அம்மனும் தீர்த்தவாரிக்காக வீதியுலா செல்வார்கள்.
அப்போது கோவிலில் தனியாக இருக்கும் முருக பெருமான் (செல்வமுத்துகுமார சுவாமி) க்கு விளையாட்டு காட்டுவதற்காக யானை ஓடிவந்து, ஓடிவந்து வணங்கி விளையாடும் என்பது ஐதீகம். இது நாய் ஓட்டம், நரி ஓட்டம் எனும் யானை ஓடும் ஐதீக நிகழ்ச்சி எனப்படுகிறது.
யானை ஓட்டம்
பிரம்மோற்சவ விழாவின் மூன்றாவது நாளான நேற்று பரிவாரங்களுடன் அம்பாள் சுவாமி தீர்த்தவாரிக்கு புறப்பட்டனர். சுவாமிகள் வீதியுலா செல்லும் வரை யானைஅமைதியாக நின்றது. பின்னர் முருக பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளும் போது அதிவேகமாக ஓடி, ஓடி மீண்டும் திரும்பி ஓடிவந்து சப்தம் எழுப்பியவாறு முருகபெருமானை வணங்கி விளையாடியது.
நரி ஓட்ட வைபவம் என்று அழைக்கப்படும் யானை ஓடும் நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து அஸ்திரதேவர், விநாயகர், அம்பாள், சுவாமி, சண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெற்றது. இதில் திருநாவுக்கரசு தம்பிரான் கட்டளை முன்னிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.