கிருஷ்ணகிரி அருகேயானை தந்தங்கள் கடத்திய 4 பேர் கைது2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே யானை தந்தங்கள் கடத்திய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் ரவி தலைமையில், சென்னை வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் கிருஷ்ணகிரி வனச்சரக வனவர்கள், வனக்காப்பாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், நாகரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது 2 மோட்டார்சைக்களில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த 4 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களின் பையை சோதனை செய்தனர். அதில் 2 யானை தந்தங்கள் இருந்தது தெரியவந்தது.
4 பேர் கைது
இதையடுத்து இரண்டு யானை தந்தங்கள் மற்றும் அவர்கள் ஓட்டி வந்த 2 மோட்டார்சைக்கிள்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 47), நாகரசம்பட்டி செந்தில் (43), பெரிய காமாட்சிப்பட்டி வள்ளி கந்தன் (42), நாகரசம்பட்டி நாகப்பன் (68) ஆகியோர் என்பதும், யானை தந்தங்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், வன விலங்குகளை வேட்டையாடுவதோ, வன பொருட்களை கடத்துவதோ கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.