சானமாவு காட்டுக்குள் முகாமிட்டுள்ள 2 யானைகள்
ஓசூர் அருகே சானமாவு காட்டுக்குள் 2 யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே சானமாவு காட்டுக்குள் 2 யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யானைகள் முகாம்
கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து காட்டு யானை கூட்டம், கடந்த வாரம் தமிழக எல்லை ஜவளகிரி வழியாக வனப்பகுதிக்குள் நுழைந்தது. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்றனர். இந்த கூட்டத்தில் இருந்து 2 யானைகள் நேற்று முன்தினம் ஓசூர் வனக்கோட்டம், சானமாவு காட்டுக்குள் முகாமிட்டுள்ளன.
வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டு உள்ளதை அறிந்த பீர்ஜேப்பள்ளி, ராமாபுரம், போடூர், ஆழியாளம் உள்ளிட்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
எச்சரிக்கை
இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று விவசாயிகள் இரவு நேரத்தில் விவசாய நிலங்களுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம். வனப்பகுதியையொட்டி ஆடு, மாடுகளை மேய்க்க அழைத்துச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து ஊருக்குள் புகாமல் இருக்கவும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சானமாவு காட்டுக்குள் 2 யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.